காசா சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கி வைப்பு!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01.04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பலஸ்தீன அரசாங்கத்திடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
இவ்வருடம் இப்தார் கொண்டாட்டத்தை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த நிதி சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், “காசா சிறுவர் நிதியத்திற்கு” பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளதுடன், அந்த நிதி எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்தில் காசோலையை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



