வெடுக்குநாறி விவகாரத்தினால் நல்லிணக்க முயற்சிகள் பாதிப்பு!

#SriLanka #Vedukunarimalai Adilingeswarar Temple
Mayoorikka
1 month ago
வெடுக்குநாறி விவகாரத்தினால்  நல்லிணக்க முயற்சிகள் பாதிப்பு!

வெடுக்குநாறி உள்ளிட்ட சம்பவங்களால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படுவதாக சிறந்த இலங்கைக்கான மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவை கவலை வெளியிட்டுள்ளன.

 இது தொடர்பில் இந்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் வடக்கே உள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வின்போது நடந்த அசம்பாவித சம்பவங்களால் சிறந்த இலங்கைக்கான சங்கமும் மற்றும் உலகத் தமிழர் பேரவையும் கவலை அடைந்துள்ளன. மஹா சிவராத்திரி தினத்தில் பாதுகாப்புப் படைகள் பக்தர்களின் உணவு, தண்ணீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை பறித்ததோடு, பலவந்தமான அவமானப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

குறிப்பாக ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட பக்கதர்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர். பல நூற்றாண்டுகள் பழமையான கலாசார மரபுகளை அழித்து பெரும்பான்மை இனத்தின் மதச் சின்னங்கள், நடைமுறைகளை திணிக்கும் அரசாங்கத்தின் பரந்த நிகழ்ச்சி நிரல் குறித்து சிறுபான்மை சமூகத்தினரிடையே சந்தேகங்களும் அச்சங்களும் காணப்படுகின்றன. இதன் காரணமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இழப்புகள் ஏற்பட்டமையும் வரலாறாக உள்ளது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு தொல்லியல்துறை ஒரு கருவியாக காணப்படுகிறது. அதேநேரம் நீதிமன்றங்களும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன. தற்போதைய நிலையில் வெடுக்குநாறியில் இரவு நேரத்தில் பூசை வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து முரண்பட்ட விளக்கங்கள் உள்ளன. 

எவ்வாறாயினும் வெடுக்குநாறியில் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் மதப் பழக்கவழக்கங்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், பொலிஸார் வெடுக்குநாறி தொல்பொருள் பகுதி என்பதால் அங்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக கூறுகின்றபோதும் அந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. இதனால் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழிபாட்டுக்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளமையானது நிம்மதி அளிப்பதாக உள்ளது.

 ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், கடந்த அமர்வில் முன்வைத்த வாய்மொழி மூலமான அறிக்கையில், இலங்கையில் தொடர்ச்சியாக கடத்தல்கள், சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தல், தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள நிலையில் வெடுக்குநாறிச் சம்பவம் அவருடைய கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதேநேரம், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய அலுவலகத்தை அமைப்பது உட்பட ஊக்குவிப்பு நிகழ்வுகள் சிலவற்றையும் ஆரம்பித்துள்ளன. 

அதேபோன்று இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்காக எமது அமைப்புக்களாலும் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான சம்பவங்கள் எதிர்மறையான பிரதிபலிப்புக்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே இவ்விதமான சம்பவங்கள் மீளவும் இடம்பெறாமையை அரச தரப்புக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றுள்ளது.