பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்தப்போவதில்லை! ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Election #Ranil wickremesinghe
Mayoorikka
1 month ago
பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை  நடத்தப்போவதில்லை! ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார்.

 நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் திங்கட்கிழமை (ஏப். 01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். 

 இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்தும் ஜனாதிபதி கலந்துரையாடியிருந்தார். இதன்போதே முன்கூட்டிய தேர்தலுக்கு வாய்ப்புகள் இல்லை என்பதுடன், அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கூறுகையில், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்துடனான தேசிய பொருளாதார மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் தற்போது சிறந்த வகையில் நகர்த்தப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கே முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும். மறுபுறம் சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை தொடரும். 

எனவே, இதற்கு முன்னர் நாட்டில் தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டிய காலக்கட்டம், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிகளுக்கு இடையூறாக அமையாது. இவற்றை கருத்தில் கொண்டோ அரசாங்கம் எதிர்கால தேர்தலுக்கான அட்டவணையை தயாரித்துள்ளது.

 எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.