ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தி : இன்னும் நீதிக்காக போராடும் மக்கள்!

#SriLanka #Easter Sunday Attack #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தி : இன்னும் நீதிக்காக போராடும் மக்கள்!

கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

ஏப்ரல் 21, 2019 அன்று, தாக்குதலில் 273 பேர் உயிரிழந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இவ்வாண்டு ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். 

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸ் அதிகாரிகள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

கடந்த சில நாட்களாகவே இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இருப்பினும் நீதி மட்டும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் அல்லது திரைமறைவில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் மட்டும் இன்னும் கிடைத்தப்பாடில்லை. 

அண்மையில் ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது ஜனாதிபதியாக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக கூறினார்.  ஆனால் அவர் அவ்வாறு கூறியவுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலங்களை பெற நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆக இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் இப்போதைக்கு பகிரங்கப்படுத்தப்படபோவதில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 

அத்துடன் அன்று ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டபோது நாடு அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியிருந்தது. ஆக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதற்கு பின்னால் நன்கு அறியப்பட்ட முகங்கள் இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்திருந்தன. 

அதேபோல் தற்போதும் நாடு தேர்தல் காலத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஆக மீண்டும் அந்த கதையை தோண்டி எடுத்து வாக்கு கேட்கும் அவலங்களும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி மறுக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாக காணப்படுகிறது.