சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!

#SriLanka
Mayoorikka
4 weeks ago
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

 கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த மாணவர்கள் வேறு விடயங்களுக்கு உட்படுகின்றனர். 

 புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்பதாக க.பொ.த. உயர் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளில் உயர் கல்விக்காக தோற்றும் 02 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர். 

 இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. அதற்கான இட முகாமைத்துவமும் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும். கல்வி முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 க.பொ.த. உயர்தர விஞ்ஞான பாடத்துக்காக முதலில் 2001 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தியதுடன், அது தற்போது 06 ஆம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை 500 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

 இதன்போது ஆங்கில பாடம் கற்பித்து அண்மைக்காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களை, மேலும் 03 வருட காலங்களுக்கு தற்காலிகமாக ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் தற்போது பாடசாலைகளில் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது