இலங்கையின் சுதந்திர தினமா? பெரும்பான்மையினத்திற்கும் இந்த சுதந்திர தினம் சாத்தியமாகுமா?

#SriLanka #history #Independence #Day #War
Mayoorikka
5 months ago
இலங்கையின் சுதந்திர தினமா? பெரும்பான்மையினத்திற்கும் இந்த சுதந்திர தினம் சாத்தியமாகுமா?

சுதந்திர வரலாறு ஆம் இலங்கையின் சுதந்திர வரலாறு இலங்கையிலே இரண்டு மொழி பேசும் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். 

சிங்களவர்கள் தமிழர்கள் மத ரீதியாக நாங்கள் பார்க்கின்ற பொழுது பௌத்தர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என பல்லின பல்மத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது உலகிற்கே தெரிந்த விடையம்.

 பொருளாதார ரீதியிலே இலங்கை தத்தளித்துக் கொண்டு மெல்ல மெல்ல மீண்டுவரும் நிலையில் இலங்கை தனது 76 ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாட அடியெடுத்து வைத்திருக்கின்றது ஆம் இந்த வேளையிலே இலங்கையிலே இருக்கின்ற சிறுபான்மையினத்திற்கு மாத்திரமல்ல பெரும்பான்மையினத்திற்கும் ஒரு விடிவு இல்லாத வேளையில் இந்த சுதந்திர தினம் சாத்தியமாகுமா என்ற ஓர் கேள்விக்குறி இருக்கிறது. இருந்தாலும் கூட நாங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்க்க முன்வருகின்றோம்.

 ஆம் லங்கா4 ஊடகத்தினூடாக இலங்கை சுதந்திரமடைந்த வரலாற்றை நாங்கள் சற்று உற்றுநோக்குவோம்... 

 132 ஆண்டுகால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த நாளை இலங்கை தன் சுதந்திர தினமாக கொண்டாடுகிறது. இலங்கை தனது சுதந்திர காற்றை சுவாசித்த நாளை சற்று திரும்பிப் பார்ப்போம். வாருங்கள்

 கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோர பிரதேசம் கைப்பற்றப்பட்டது இதனைத்தொடர்ந்து கி.பி 1602 ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையர்கள் அடிமைப்பட வேண்டி ஏற்பட்டதுடன், கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் காரணமாக கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த இலங்கை மக்களும் மீண்டும் அடிமை நிர்வாகத்திற்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

 கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களின் பிளவு அதிகார குழுக்களினால் 1815 ஆம் ஆண்டளவில் உடரட்ட என்ற மலையகப் பிரதேசத்தையும் எந்தவித சிரமமுமின்றி பிரிட்டன் தமது நிருவாகத்திற்கு உட்படுத்தியது. இதன் பின்னர் முழு இலங்கையும் ஆங்கிலேயரின் நிருவாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இங்கிருந்தே ஆரம்பமாகின்றது என்று கூறலாம். 

1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் ஆரம்பமானவை நாட்டு மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயாகும். 

1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியினால் சிறிய அளவில் அல்லது ஆங்கிலேயரின் நிர்வாகத்தில் அவர்களது கொடூரமான நிர்வாகத்தில் தளர்வை ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டது. 1831ஆம் ஆண்டில் அரசாங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோல்புறுக் ஆணைக்குழுவினர், முதல் முறையாக அவர்களது ஆட்சி முறையில் மறுசீரமைப்பு ஆலோசனையை சமர்ப்பித்தனர். 

பிரித்தானியர்களின் இந்த முயற்சி பெருமளவில் வெற்றியடையவில்லை. 1848 ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அது இலங்கை சுதந்திர போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாக அமைந்தது. 

1796ஆம் ஆண்டில் இலங்கையின் ஒரு பகுதி மாத்திரம் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த யுகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முடிவிற்கு வந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் கடந்த 72 வருட காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இரத்து செய்யப்பட்ட பின்னர் இரண்டு அரசியல் யாப்புகள் மூலம் நாடு முன்னெடுக்கப்பட்டது. 

இதில் முதலாவது 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மக்கள் குடியரசு யாப்பு ஆகும். அத்தோடு இரண்டாவது 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு அமைப்பாகும். வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து தாய்நாட்டின் இறைமைக்காக இரத்தம் சிந்தியமை மற்றும் உயிரை தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை அளப்பரியதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எமது தாய்நாட்டை கட்டுப்படுத்திய நாள் தொடக்கம் நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பின் பெறுபேறே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமாகும்.

 அடிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி மத்தியில் உயிரை தியாகம் செய்த பத்தாயிரம் பேரான தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் போன்ற நாட்டு பற்றைக் கொண்ட அனைவரதும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட் முடியாது. இதன் பெறுபேறாக எதிர்காலத்தில் பயன்களை பெறுவதற்கு இதற்கான பின்புலத்தை வகுப்பது தற்போதைய யுகத்தின் தேவையாகும். 

 இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தினை நோக்கும் போது சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1948 ஃபெப்ரவரி மாதம் 4 ஆக இருந்த போதும், அது தொடர்பான வைபவங்களும் பிற நிகழ்ச்சிகளும் அந்த மாதத்தின் 17 ஆம் திகதிவரை நடைபெற்றிருந்தன. சுதந்திரம் அளிக்கப்படும் நாள் என்ற படியால், ஏற்கனவே அம்மாதம் 4 ஆம் திகதி முழு இலங்கைக்கும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று ஒரு புதன் கிழமை. 

அதிகாலையிலேயே கோயில்கள், பௌத்த விகாரைகள், கிருஸ்தவ தேவாலயங்கள் ஆகியவற்றின் மணிகள் ஒலித்தன. பழைய நாடாளுமன்றத்தில் பிரித்தானியக் கொடிக்குச் சமமாக தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. புதிய பிரதமராகத் தெரிவாகியிருந்த டி.எஸ். சேனாநாயக்கவுக்கு நல்வாழ்த்துக்கள் குவிந்தன. பிரித்தானியாவின் அப்போதைய பிரதமராக இருந்த Clement Attlee யிடமிருந்தும் வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. சுதந்திரமடைந்த இலங்கையின் கவர்னர் ஜெனரலாக Henry Monck Mason Moore பதவியேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வு ராணியின் மாளிகையை இடம்பெற்றது. அந்த மாளிகையே தற்போது ஜனாதிபதி மாளிகை ஆக்கப்பட்டுள்ளது. காலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

 இலங்கை சுதந்திரம் அடைந்தமை நாடளாவிய ரீதியில் அன்று வெகுவாக கொண்டாடப்பட்டது. அங்கு இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர் இலங்கை சுதந்திரம் அடைந்ததை, உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

 இவ்வாறாக, பிரித்தானிய அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற இலங்கை, 1972 ஆம் ஆண்டில், சிரிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் தன்னைக் குடியரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டமை குறிப்பிட வேண்டியத் தகவலாகும். 1948 பெப்ரவரி 4ம் திகதி, இலங்கையின் சுதந்திரதினம் இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியிலிருந்து விடுவித்து, டொனிமினியன் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டது. “டொமினியன் அந்தஸ்த்தின்” படியும் இலங்கை சம்பிரதாயபூர்வமாக பிரித்தானிய முடியின் கீழ்தான் இருந்தது. 

இலங்கையின் ஆளுநர், பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட, முடியின் பிரதிநிதியே. இந்தியா சுதந்திரம் கிடைத்த 1947 ஓகஸ்ட் 15 முதல் குடியரசாகும் வரை இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால், இரண்டரை வருடங்களுக்குள் குடியரசு அரசியலமைப்பை ஸ்தாபித்து அவர்கள் குடியரசாகிவிட்டார்கள். இலங்கையின் நிலை அதுவல்ல.

 பிரித்தானிய பாராளுமன்றம் ஆக்கித்தந்த சோல்பரி அரசியலமைப்பு இலங்கையில் 1972 வரை நடைமுறையிலிருந்தது. அதுவரை நாம் டொமினியனாகவே இருந்தோம். சிறிமாவோவும், அவரது இடதுசாரித் தோழர்களும் ஆட்சிக்கு வந்து 1972ம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்படும் வரை, இலங்கை தொழில்நுட்ப ரீதியாக பிரித்தானிய முடியின் கீழ்தான் இருந்தது. இலங்கையை முழுமையாகக் கைப்பற்ற போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் முடியவில்லை. 

பிரித்தானியர்தான், கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி, முழுத்தீவையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆனால் கண்டி மன்னனுக்கெதிராக இயங்கிய சில “தேசிய வீரர்கள்”, கண்டிய மன்னனை வீழ்த்த, பிரித்தானியரோடு ஒப்பத்தம் போட்டு, கண்டியை பிரித்தானியரிடம் கையளித்ததுதான் வரலாறு. 1972ல் இலங்கை குடியரசாக மாறிய மே 22, சிலகாலம் வரையிலும் “குடியரசு தினமாக” இலங்கையின் கொண்டாடப்பட்டது. 

ஆனால் அது தற்போது மறக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு பெரும்பான்மையினரின் மதத்திற்கு முதலிடமும், பெரும்பான்மையினர் மொழியை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக அரசியலமைப்பு ரீதியில் பிரகடனம் செய்த அரசியல் யாப்பு அது. ஆகவே இலங்கையிலுள்ள சிறுபான்மையினரை அந்நியராக உணரவைத்த ஒரு அரசியல்யாப்பு பிறந்ததினம் இலங்கையர்களை ஒன்றிணைக்கும் தினமாக அமையாது. அந்த வகையில் மே 22 முக்கியத்துவம் இழந்து, மறக்கப்பட்டமை இலங்கையர்க்கு பெரும் இழப்பல்ல.

 இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு பலகாலம் முன்பு, இலங்கையில் “சிலோனீஸ்” எனும் சிவில் தேசக் கட்டமைப்பிற்கான எண்ணங்கள், ஐரோப்பாவில் கல்வி கற்றுத் திரும்பிய பல தலைவர்களிடமும் இருந்தது. ஆனால் 1920-களின் பின்னர் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. பெரும்பான்மை இனத்தேசியவாதத்தின் எழுச்சி, இலங்கைக்குள் இலங்கையர் என்ற சிவில் தேசிய அடையாளம் கட்டியெழுப்பப்பட முடியாத நிலையை ஏற்படுத்தியது. மாறாக இலங்கை அரசியல் இனத்தேசிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டது. 

அதன் விளைவுதான் இலங்கை உள்நாட்டுக்குள் உடைந்துபோய் நிற்கிறது. சுதந்திரம் என்பது ஒரு பேருணர்வு. அதனால்தான் மனிதன் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள உயிரைக்கூடப் பணயம்வைக்கத் தயாராக இருக்கிறான். அத்தகைய சுதந்திரம் என்பது கொண்டாடப்பட வேண்டுமானால், அது ஒவ்வொரு மனிதனாலும் முதலில் உணரப்பட வேண்டும். சொந்த நாட்டு மக்களை, சொந்த நாட்டுக்குள்ளேயே அந்நியர்களாக உணரவைத்துவிட்டு, சுதந்திரத்தைக் கொண்டாடு என்றால், அது எப்படி முடியும்? இலங்கை என்ற அற்புதமானதொரு தீவை, ஆட்சியாளர்கள் எனும் அரசியல்வாதிகள் சீரழித்துவிட்டார்கள். 

அது ஒன்றுதான் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளியாக இன்று இருக்கிறது.