ட்ரம்ப், நோபல் சமாதான விருதை எதிர்பார்ப்பது நியாயமா? (வீடியோ இணைப்பு)

#world_news #Trump
Mayoorikka
7 hours ago
ட்ரம்ப், நோபல் சமாதான விருதை எதிர்பார்ப்பது நியாயமா?  (வீடியோ இணைப்பு)

உலகில் மதிப்புமிக்க ஒரு விருதாகக் கணிக்கப்படுவது நோபல் விருது. அறிவிக்கப்பட்ட நாள் முதலாக 1901 முதல் இன்றுவரை ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் நோபல் விருதுகள் யாவையும் தகுதியானவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு உள்ளதா என்ற கேள்வி நெடுங்காலமாக கேட்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. 

முடிவற்றுத் தொடரும் இந்த விவாதங்கள் இனிவரும் காலங்களிலும் நீடிக்கக் கூடும். ஒரு விருதை, அதுவும் உலகளாவிய அடிப்படையில் வழங்கும் நிறுவனம் தனக்கென ஒருசில வரையறைகளைக் கொண்டிருப்பது இயல்பானதே. அந்த வரையறைகளை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. 

ஆனாலும் விருது வழங்கப்படுவதற்குக் கூறப்படும் காரணங்களைக் கேள்விக்கு உட்படுத்த முடியும். அத்தகைய கேள்விகளுக்கு விருது வழங்கும் நிறுவனம் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

 சமாதானத்துக்கான நோபல் விருதுகளின் பட்டியல் தொடர்பிலும் நீண்ட விமர்சனங்கள் உள்ளன. வழங்கப்பட்ட விருதுகள் ஒருபுறம் இருக்க வழங்கப்படாத விருதுகளின் பட்டியல் மறுபறம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் தேசபிதா என வர்ணிக்கப்படும் காந்தி அவர்களுக்கு நோபல் சமாதான விருது வழங்கப்படாமை தொடர்பில் அடிக்கடி சுட்டிக் காட்டப்படுவதைப் பார்க்க முடிகின்றது. நேர்வே நாட்டில் உள்ள ஒரு குழுமமே நோபல் விருதுகளுக்குப் பொறுப்பாக உள்ளது.

 மேற்குலக நாடான நோர்வேயில் அமைந்திருப்பதாலேயே என்னவோ அந்தக் குழுவின் தெரிவுகள் பெரும்பாலும் மேற்குலக நிலைப்பாடு சார்ந்ததாகவே இருப்பதைப் பார்க்க முடிகின்றது. மேற்குலக அரசியல் சார்பு, சிந்தனை மற்றும் பண்பாட்டுச் சார்பு நோபல் விருதுக் குழுமத்தின் முடிவுகளில் பிரதிபலிப்பதை தொடர்ந்து பார்க்க முடிகின்றது. கீழைத்தேய உலகம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுவதோ தொடர்கதையாக உள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் சமாதான விருதுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை தற்போது இந்த விடயத்தை மீண்டும் ஒருமுறை பேசுபொருளாக ஆக்கியுள்ளது. 


பாகிஸ்தான் அரசாங்கம் உட்பட பல தரப்புகளும் ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்துள்ள போதிலும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அவரின் பெயரைச் சிபார்சு செய்துள்ளமை இந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக ஆக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் சமாதான விருது மீது ஒரு கண் உள்ளமை வெளிப்படையான உண்மை. அதனை அவர் பல்வேறு தடவைகளில் வெளிப்படையாகத் தெரிவித்தும் உள்ளார். 

இறுதியாக அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்த போதில் தனக்கு அந்த விருதை வழங்க முன்வர மாட்டார்கள் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். ஆபிரிக்க நாடுகளான றுவான்டாவுக்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஒன்றைச் சாத்தியம் ஆக்கிய பின்னர் ட்ரம்ப் இவ்வாறு எழுதியிருந்தார். '

இதற்காக எனக்கு நோபல் சமாதான விருது கிடைக்காது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியமைக்காக எனக்கு நோபல் சமாதான விருது கிடைக்காது, சேர்பியாவுக்கும் கொசோவாவுக்கும் இடையிலான போரை நிறுத்தியமைக்காக எனக்கு நோபல் சமாதான விருது கிடைக்காது, எகிப்துக்கும் எதியோப்பியாவுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக எனக்கு நோபல் சமாதான விருது கிடைக்காது (அமெரிக்காவின் முட்டாள்தனமான நிதியுதவியுடன் எதியோப்பியா நிர்மாணித்துள்ள மாபெரும் அணைக்கட்டு நைல் நதிக்கு வரும் நீரின் அளவைக் குறைத்துள்ளது), மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கக் கூடிய ஆபிரகாம் உடன்படிக்கையை எட்டியதற்காக எனக்கு நோபல் சமாதான விருது கிடைக்காது.

 ரஸ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் என நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் சமாதான விருது கிடைக்காது. எதுவாக இருந்தாலும் மக்களுக்குத் தெரியும், அதுவொன்றே எனக்குப் போதும்.' போர்களை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்து, தேர்தலில் வென்று பதவியேற்ற ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தில் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகளுக்காக நோபல் சமாதான விருதைக் கோருவது நியாயமானதுதானா? அவர் பதவியேற்ற போதில் உலகில் மிகவும் எரியும் பிரச்சனைகளாக ரஸ்ய - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - பலஸ்தீனப் போர்கள் நடந்து கொண்டிருந்தன. இரண்டு போர்களிலும் ஒரு தரப்பை அமெரிக்கா நேரடியாக ஆதரித்து வருகின்றது. இஸ்ரேல் - பலஸ்தீனப் போரில் அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்டும் வருகின்றது.

 உக்ரைன் போர் தொடர்பான சமாதான முயற்சிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்த அமெரிக்கா, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைத்துள்ள போதிலும் சமாதான முயற்சிகள் ஒரு கட்டத்தைத் தாண்டி மேலே செல்ல முடியாத தேக்க நிலையிலேயே உள்ளதைப் பார்க்க முடிகின்றது. பலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவு காரணமாக காஸா பகுதியில் இனவழிப்பு தொடர்ந்து வருகின்றது. 

2023 அக்டோபர் முதல் நீடித்துவரும் மோதலில் இதுவரை 57,000 வரையான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இடைக்கிடையே சில மோதல் தவிர்ப்பு உடன்பாடுகள் எட்டப்பட்ட போதிலும் மோதல்கள் தொடர்ந்த வண்ணமேயே உள்ளன. ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் லெபனான், சிரியா, யேமன் என விரிவடைந்ததையும் பார்க்க முடிகின்றது.

 மறுபுறம் கடந்த மாதத்தில் ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மூண்ட போர் 12 நாட்கள் நீடித்தது. இறுதிக் கட்டத்தில் அமெரிக்காவே நேரடியாகக் களத்தில் இறங்கி ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதைப் பார்க்க முடிந்தது. சமாதானத்தை உருவாக்கவே தான் தாக்குதல்களை நடத்தியதாக ட்ரம்ப் அறிவித்த போதிலும் அந்த அறிவிப்பை உலகம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

 இத்தகைய 'தகுதிகளைக்' கொண்டுள்ள ட்ரம்ப், நோபல் சமாதான விருதை எதிர்பார்ப்பது நியாயமா என்ற கேள்வி எழுகிறது. அதிலும், காஸாவில் நடைபெற்றுவரும் இனவழிப்புக் குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு குற்றவாளியான நெதன்யாஹு அவரைப் பரிந்துரை செய்திருப்பது 'சமாதானத்துக்கான விருது' என்ற வியடத்தையே கேலி செய்வது போல உள்ளது. சமாதானத்துக்கான நோபல் விருது கேலிக்கு ஆளாகுவது இதுவே முதன்முறை அல்ல.

 உலகிலேயே மிக மோசமான சர்வாதிகாரி என அறியப்படும் அடொல்ப் ஹிட்லரின் பெயர் 1939ஆம் ஆண்டு யனவரி மாதத்தில் நோபல் சமாதான விருதுக்குப் புரிந்துரை செய்யப்பட்டிருந்தது. நல்ல வேளையாக அவருக்கு சமாதானத்துக்கான விருதை வழங்குவதற்கு அன்றைய நோபல் விருதுக் குழுமம் முன்வரவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக முதலாவது கறுப்பினத் தலைவராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட போது 2009ஆம் ஆண்டில் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது. 

அவரது ஆதரவாளர்களை மாத்திரமன்றி ஒபாமா அவர்களையே அந்த அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியிருந்தது என்பதை அவரின் வாயேலேயே கேட்க முடிந்தது. என்ன சாதனையை நிகழ்த்தினார் என்பது தெரியாமலேயே ஒரு விருதை வழங்கி அவமானப்பட்டுக் கொண்டது நோபல் விருதுக் குழுமம். இது தொடர்பில் விருதுக் குழுமத்தின் செயலாளர் பின்னாளில் மன்னிப்புக் கேட்ட சம்பவமும் நிகழ்ந்தது. ட்ரம்ப் அவர்களின் பெயர் நோபல் சமாதான விருதுக்குப் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறை அல்ல. ஏற்கனவே அவரது முதலாவது பதவிக் காலத்திலேயே பல தடவைகள் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 

அன்றைய காலகட்டத்தில் அவரின் பெயரைப் பரிசீலனை செய்யாத விருதுக் குழுமம் இந்த வருடத்தில் அவரின் பெயரைப் பரிசீலனைக்கு எடுக்குமா என்பது போகப்போகத் தெரியும். அவர்கள் எடுக்கப்போகும் முடிவிலேயே விருதின் தகுதியும், பெறுமானமும் தங்கியிருக்கப் போகின்றது என்பதே உண்மை. அதனை அறிந்து கொள்ள எதிர்வரும் நவம்பர் மாதம் வரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும்.

-சுவிசிலிருந்து சண் தவராஜா-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1752616706.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!