இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போதே சுதந்திர தினத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமரை அழைத்துள்ளமை குறித்து தகவல் வெளியிட்டார். மேலும் இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை சுதந்திர தினத்தினை 'புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின்போது உறுதிப்படுத்தினார்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இது இலங்கையின் நான்காவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இதனூடக தேயிலை, தேங்காய் பால் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற முக்கிய ஏற்றுமதிகளில், தாய்லாந்து சந்தையில் வரி இல்லாத அணுகலை இலங்கை பெறும்.