போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற 22 லட்சம் பணத்துடன் பெண் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்கார்களான கணேமுல்ல சஞ்சீவ மற்றும் "பெட்டா மஞ்சு” ஆகியோரின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் குழியொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சோதனையின் போது குறித்த வீட்டில் பெண்ணொருவரும் ஆணொருவரும் இருந்துள்ளனர்.
பெண்ணின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது இந்த பணமானது போதைப்பொருள் கடத்தலின் மூலம் கிடைக்கப் பெற்றது என தெரியவந்துள்ளதுடன் இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கெஹெல்பத்தர பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.
குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.