நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்! எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்

#SriLanka #Court Order #Tourist #Tamil People #Lanka4 #Social Media
Mayoorikka
1 year ago
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்! எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்

 நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது. அடுத்த வாரம் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக 224 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு நாட்டு மக்கள் தேர்தல் ஊடாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தினர்.

 இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சிவில் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

 சுதந்திர ஊடக மையத்தின் செயலாளர் லசந்த சில்வா குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் சொல்லொன்னா துயரங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்குவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆகவே, மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு மதிப்பளித்து மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். ஊடக மற்றும் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். 

மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார். தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் சட்ட வகிபாகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும்,பாராளுமன்றத்துக்கு மக்களாணை என்பதொன்று கிடையாது. பல பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பொருளாதார காரணிகளுடன் தொடர்புப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதும் பயங்கரவாத செயற்பாடு என்று சித்தரிக்கும் வகையில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டங்களுக்கு கையுயர்த்துவதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

 ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நதீஷானி பெரேரா குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முடக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கும், மக்கள் பிரநிதிகளுக்கும் கிடையாது. ஊழல் முறைகேடுகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்றும், பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதையும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.

 ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக மக்களின் உரிமைகளை முடக்கும் வகையில் சட்டமியற்றப்படுகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகும் என்றார்.

 மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகையில், பாரதூரமான இரண்டு சட்டமூலங்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை உருவாக்க அரசாங்கம் உத்வேகத்துடன் செயற்படுகிறது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும், ஆகவே மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.நிக்ஷன் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்க்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தை முழுமையாக முடக்கும்.

சமூக வலைத்தளங்களை இலக்காகக் கொண்டு இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.அரசாங்கத்துக்கு சார்பாக ஒருசில ஊடகங்கள் செயற்படுகின்றன நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன. இந்த சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.

இவர்களின் சுயாதீனத்தன்மை ஜனாதிபதிக்கு பொறுப்புடையதாக உள்ள நிலையில் 22 மில்லியன் மக்களின் கருத்து சுதந்திரத்தை ஐந்து பேர் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பில் மக்களின் அபிலாசைகள் மற்றும் நிலைப்பாடு ஏதும் கேட்கப்படவில்லை.நாட்டு மக்களிடமிருந்து அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!