காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை நிறைவு செய்ய தீர்மானம்!
காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய திட்டம் என வேலுகுமார் எம்.பிக்கு அமைச்சர் விஜேதாச பதில் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்த விடயம் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வேலுகுமார் எம்.பி. உரையாற்றுகையில், கடந்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட அலுவலகம் தற்போது காணாமல் போயுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் 2ஆயிரம் தினங்களுக்கும் அதிகமான நாட்களாக வீதியில் இருக்கின்றனர்.
அது தொடர்பில் தீர்வொன்றை அவர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் நான் அறிந்தமட்டில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட அலுவலகம் தற்போது காணாமல் போயுள்ளதால அந்த மக்களுக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லாமல் இருக்கிறது என்றார்.
அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்க அமைக்கப்பட்ட அலுவலகம் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்திருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு அதனை செயற்படுத்தியபோது அதற்கு 14ஆயிரத்தி 998 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதில் 62 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. அத்துடன் கடந்த 18 மாத காலப்பகுதியில் அந்த அலுவலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாேம்.
அதன் பிரகாரம் 5200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை நாங்கள் முடித்திருக்கிறோம். அதன் பிரகாரம் 2025 முடிவடையும்போது காணாமல் போனோர்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் 14998 முறைப்பாடுகளையும் விசாரணை செய்து முடிக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.