வடமாகணத்திற்கான ரணிலின் விஜயம் இயலாமையின் வெளிப்பாடு என்கிறார் சபா குகதாஸ்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு மாகாண விஜயத்தின் போதான அறிவிப்புக்கள் அவரது இயலாமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது என ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தந்திரம் என நினைக்கும் காலம் கடத்தும் பொய்களை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர் என்றும் இந்த விஜயமானது தனது எதிர்கால தேர்தலுக்கான ஆதரவுத் தளத்தை வலுப்படுத்தும் என அவர் நம்பினால் அது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவந்து உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுப்பதாக கூறியமை பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிக அவசியமென கூறியது தமிழரின் இனப்பிரச்சினை விவகாரத்தைப் பற்றி கதைப்பதை தவிர்ப்பதற்காகவே என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சிவபூமி என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஏன் திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற தொன்மை வாய்ந்த சிவபூமிகளை புனித பிரதேசமாக அறிவிக்கவில்லை என்றும் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.