இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜப்பானிய நிதியமைச்சர்
ஜப்பானிய நிதியமைச்சர் ஸுனிச்சி சுஸுகி தலைமையிலான 10 பேரடங்கிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
ஜப்பானுக்கான இலங்கைத்தூதுவர் ஈ.ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஸுனிச்சி சுஸுகி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் டோக்கியோவில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது ஜப்பான் நிதியமைச்சர் ஸுனிச்சி சுஸுகி தலைமையில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டை வந்தடையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதேவேளை இச்சந்திப்பின்போது ஜப்பானிய நிதியமைச்சரின் இலங்கை வருகை அறிவிப்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தூதுவர் ரொட்னி பெரேரா, இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இருதரப்பு அடிப்படையிலும், சர்வதேச ரீதியிலும் ஜப்பான் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி ஜப்பானின் அனுபவ மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கைத்தொழிற்துறையை நவீனமயப்படுத்துவதில் இலங்கை ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுஇவ்வாறிருக்க சுமார் 10 வருட இடைவெளியின் பின்னர் இடம்பெறவிருக்கும் ஜப்பானிய நிதியமைச்சரின் இலங்கை விஜயம் பொருளாதார ரீதியில் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுவதுடன், இதன்போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.