இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் ஊடாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மின்சார சபையின் எந்தப் பணியாளரும் தனது அதிகாரப்பூர்வ அடையாளத்தையும் சேவைகள் தொடர்பிலான தகவலையும் சமூக ஊடகங்களுக்குப் சேவை நேரத்தில் பகிர முடியாது.
மின்சார சபையின் ரகசிய தகவல்களை வெளியிடுவது, தவறான அல்லது அரசியல் அவதூறு விடயங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது ஆகியவை ஒழுங்கு விதிகளின்படி கடுமையான குற்றமாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிரூபத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
”சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் வகையில் செயல்படும் எந்த ஒரு ஊழியரையும் இடைநீக்கம் செய்யவும், அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் மின்சார சபையின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.