புத்தளத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உயிரிழப்பு
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ விஷேடப் பிரிவில் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப் பெற்ற 46 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து அதிகாலை பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அனுர மங்கள் குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.