அரசியல் ரீதியில் பிளவடைந்துள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்: சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டு
தமிழ் புலம்பெயர் அமைப்புகளிடையே, அரசியல் பிளவுகள் ஆழமாகியுள்ளதாக த டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் அரசியல் நிலவரங்களை ஆராயும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து சுமார் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் அரசியல் பிளவுகள் தோன்றியிருந்த நிலையில், அது தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதாக அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
நீண்ட காலமாக இலங்கை அரசாங்கம் செய்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி வரும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளிடையே அரசியல் பிளவுகள் மேலோங்கியுள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியதாக இலங்கை அரசாங்கத்தால் கடந்த காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த, உலக தமிழர் பேரவை, அந்த தடை நீக்கப்பட்டதன் பின்னர் பௌத்த தூதுக்குழுவுடன் இணைந்து வெளியிட்ட இமாலய பிரகடனம் இந்த பிளவை அதிகரித்துள்ளதாக த டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியிலும் பதற்றதை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தாம் பரிசீலிப்பதாக ஜனாதிபதியும், உறுதியளித்துள்ளார்.
அந்த பிரகடனத்தில் எவ்விதமான பாரதூரமான விடயங்கள் இல்லாத போதிலும், மிகவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில், அந்த ஆவணத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்பதை வலியுறுத்தி, பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளதாக த டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.