உலக நாடுகளை விட குறைவான காலப்பகுதியில் நாம் மீண்டு வந்துள்ளோம்: ரணில் பெருமிதம்
நாட்டின் மறுசீரமைப்புக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை அங்கீகரிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இப்போது வங்குரோத்து அரசு என்ற முத்திரையை கழற்றிவிட ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) தெரிவித்தார்.
விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடினமான பயணத்தில் ஒரு முக்கிய இடத்தை அடைந்துவிட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த சவாலான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்கு தலைமை ஏற்றமை குறித்து எனக்கு பணிவான மகிழ்ச்சியே உள்ளது என்றார்.
நான் கடந்த ஆண்டு வங்குரோத்தான நாட்டையே பொறுப்பேற்றேன். இந்த வங்குரோத்து நாட்டைக் பொறுப்பேற்க இந்த நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் முன்வரவில்லை.
இந்த சவாலை ஏற்க அனைவரும் பயந்தனர். இப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றும் வீரர்கள் மற்றும் தலைவர்கள் எவருக்கும் முன்வருவதற்கு தைரியம் இருக்கவில்லை.
ஆனால் நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இலங்கை ஆபத்தான கயிற்றுப் பாலத்தை கடக்க நான் என்னை அர்ப்பணிப்பேன் என்று அன்று கூறினேன். என்னிடம் இருந்ததெல்லாம் உறுதியும் திட்டமும் மாத்திரமே. அப்போது எனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு உறுப்பினர் கூட பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.

இந்த கயிற்றுப் பாலத்தின் பயணத்தை சிலர் கேலி செய்தனர். அவமதித்தனர். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் என்னை ஆதரித்தனர். அவர்களையும் கேலி செய்தனர். மேலும் நாட்டு மக்கள் எனக்கு ஆதரவளித்தனர்.
நாட்டின் நலனுக்காகவும், இலங்கை அன்னையின் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு இந்தப் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர் என்றார்.
இங்கு இன்னொரு விடயத்தையும் வலியுறுத்த வேண்டும். உலகில் வங்குரோத்து அடைந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப எடுத்துக்கொண்டதை விட குறைந்த காலத்தில் நம்மால் மீண்டுவர முடிந்தது. மேலும், மக்கள் மீது குறைந்தளவு சுமையை சுமத்தி இந்த சவாலை வெற்றிகொள்ள முடிந்தது.
இது ஒரு பாரிய வெற்றியாகும். கிரீஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி 2008 இல் ஏற்பட்டது. அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. அவர்கள் நெருக்கடியைச் சமாளிக்க தனிநபர் வருமான வரியை 45% ஆக உயர்த்தினார்கள். நான் நாட்டைப் பொறுப்பேற்ற ஆரம்ப கட்டத்தில், நமது நாட்டில் பணவீக்கம் 70%ஐத் தாண்டியது. கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள், அதை 1.5% ஆகக் குறைக்க முடிந்தது.
நமது திறைசேரிப் பத்திர வட்டி வீதம் (Treasury bills) 30% லிருந்து 13% ஆக குறைந்துள்ளது. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையாமல் பாதுகாத்து ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு அதனைக் கொண்டு வந்தோம்.
நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி 80% வரை அதிகரித்திருந்தது. ஒரு டொலருக்கு 360 ரூபாய் வரை ரூபாவின் பெறுமதி குறைந்தது. இப்போது ஒரு டொலருக்கு 325-330 ரூபா என்ற அளவில் நிலைபெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லெபனான் இன்னும் அந்நிய செலாவணி விகிதத்தை நிலைப்படுத்த முடியவில்லை. கயிற்றுப் பாலம் எனும்போது ஹென்றி ஜெயசேனவின் “ஹூனுவடயே கதை ” தான் நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருகிறது.
அந்த நாடகத்தில் வருகின்ற கயிற்றுப் பாலத்தின் பாடல். கயிற்றுப் பாலத்தின் பாடலைப் பாடும் குரூஷா கூறுகிறார்.
"எங்களுக்கு வேறு வழியில்லை, மகனே - இந்த வழியில், செல்வோம் மகனே" இன்றும் நாம் அதனையே கூற வேண்டும். இந்த வழியைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.