சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்!
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய பயணியை விமான ஊழியர்கள் கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (13.12) காலை 07.20 மணியளவில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்திலேயே இந்த பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் 49 வயதான இந்தியர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த விமானப் பயணியான இவர், இந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து வேறு விமானத்தின் மூலம் இந்தியா திரும்பிச் செல்ல முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் தனது தந்தையைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த 08 வயதுடைய சிறுமியே இந்தியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் முறைப்பாடு செய்ய சிறுமியின் தாயார்நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், இந்திய பிரஜையை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸார் பலாத்காரத்திற்கு உள்ளான இலங்கை சிறுமியையும் இந்திய பிரஜையையும் மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர், இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.