ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்!
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றிய ரணில் விக்கிரமசிங்க இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி நேற்று (04.12) இரவு நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுபாயில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 30ஆம் திகதி காலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி காலநிலை மாற்ற மாநாட்டில் உரையாற்றியதுடன், காலநிலை நீதி மன்றத்திற்கான பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழக செயற்றிட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அத்துடன் பல நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.