மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரும் ஜுலை மாதம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என உறுதி!

மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோகண திசாநாயக்க இன்று (4.12) பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
அத்துடன் அடுத்த ஆண்டு மைதானத்தின் வேலைகள் பூர்த்தி செய்ய 50 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தார்.
மன்னார், நறுவிலிக் குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் மக்கள் பாவனைக்கு விடப்படும் என உறுதி அளித்த போதும் இன்னமும் வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சபையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவர் மேற்படி அறிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ரோகண திசாநாயக்க, நீச்சல் தடாகம், மெய்வல்லுநர் தடகளம் மற்றும் பாதுகாப்பு அறை என்பனவே முடிவுறுத்தப்பட வேண்டியுள்ளது என்பதுடன் இவ்வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அனைத்து நிர்மாணப்பணிகளும் முடிவுறுத்தப்பட்டு, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.



