இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை, நேற்றிரவு (02.12) யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீற்றர் தொலைவில் வடக்கு அட்சரேகை 11.2° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 82.7°க்கு அருகாமையில் நிலைகொண்டிருந்தது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் புயலாக மாறும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலையே நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.