பொலிஸார் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர்! இது நியாயமானதா? சபையில் கஜேந்திரகுமார் கேள்வி
நீங்களே நினைவுகூரலை அனுமதித்திருந்த நிலையில் நீதிமன்றங்களும் அனுமதித்திருந்த நிலையில் பொலிசார் அதனை பயங்கரவாதம் என்று கூறி பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நீதியமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் இருப்பதால் நாங்கள் சிறச்சாலைகளுக்கு அடிக்கடி போவதுண்டு.
அங்கு செல்கின்ற போது சிறைச்சாலையில் இருக்கும் உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகள், இப்பொழுது இருக்கக் கூடிய பொருளாதார நெருக்கடியில் தங்களையும் பொலிஸ் துறைக்கு சமமாக கருதி அவர்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகளை தங்களுக்கும் வழங்குமாறு கேட்கிறார்கள். அந்தவகையில் நீங்கள் அவர்களது அந்த கோரிக்கையை கவனத்தில் எடுக்கவேண்டும். பொலிஸாரின் எண்ணிக்கையைபோன்று இவர்களின் ஆளணி பெரியது கிடையாது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களாக ஆறாயிரம் அளவில் தான் உள்ளனர். எனவே இத்தகைய நிவாரணங்களை அவர்களுக்கு வழங்குவதில் சுமையெதுவும் உங்களுக்கு இருக்கப்போவதில்லை.
இரண்டாவதாக – இன்று 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கிறார்கள் இதில் 9 பேர் குற்றவாளிகளாக தீர் ப்பளிக்கப்பட்டு தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். மிகுதி 5 பேருக்கு எதிராக வழக்குகள் உள்ள நிலையில், குறிப்பாக கிருபாகரன் என்னும் அரசியல் கைதிக்கு - அவரது ஒப்புதல் வாக்குமூலமானது - இதற்கு முதல் நடந்த வழக்குகளிலே நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் அவரது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால், அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்தி புதிதுபுதிதாக வழக்குகளை உருவாக்குகிறார்கள்.
இந்த விடயம் மிகப்பெரும் அநியாயம் ஆகும். கடந்த வருடமும் இந்த விடயத்தை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இப்படி செய்வது மிகவும் தவறான விடயமாகும். இது போன்ற அநியாயமான செயற்பாட்டை செய்யாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
மற்ற நபர்களுக்கு மூன்று நான்கு வழங்குகள் உள்ளன. ஏனைய வழக்குகளில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தும் - ஒரு வழக்கில் மட்டும் - பிணையை வழங்காமல் அதிகாரிகள் எதிர்ப்பைத் தெரிவித்து, இவர்கள் மீளுருவாக்கத்தில் ஈடுபடலாம் என்று சந்தேகம் இருப்பதாகக் கூறி இவர்களுக்கு பிணைவழங்குவதை தடுத்து வருகின்றனர்.
இதுவும் ஒரு அநியாயமாகும். ஏனைய பிணை வழங்கிய இடங்களில் அவர் வெளியில் இருந்தால் மீளுருவாக்கத்துக்கு பிரச்சினையில்லையா? இந்த ஒரு வழங்கில் மாத்திரம் தான் பிணை வழங்குவதற்கு மீளுருவாக்கம் என்ற காரணம் சொல்லமுடியாதல்லவா? ஆகவே இது ஒரு அநியாயமான செயற்பாடாகும்.
நீதி அமைச்சர் என்னும் வகையில் இதற்குரிய வழிப்படுத்தல்களை வழங்கி ஆகக்குறைந்தது அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்படவேண்டும். 2015 இல் நீங்கள் அமைச்சராக இருந்தபோது தான் - ஜெனிவாவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சொன்னீர்கள். அதனை நீக்குவதாகவும் சொன்னீர்கள். அந்த சட்டத்துக்கு கீழேதான் இவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரமான சட்டம் நீக்கப்படவேண்டும் என்று உலகத்துக்கு நீங்கள் சொல்லியிருக்கும் நிலையில் - அவர்கள் ஏற்கனவே சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கின்ற நிலையில் - அவர்களை தொடர்ந்தும் வழக்குகள் என்னும் பெயரில் இழுத்தடிப்பது பொருத்தமற்ற செயற்பாடாகும். இவ்விடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான அரசியல் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.
அடுத்து – முதலில் கூறியது பழைய வழக்குகள் தொடர்பானது. ஆனால் தற்போதும் கூட பொலிசார் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்கிறார்கள். உதாரணமாக – நினைவேந்தல்கள் கடைப்பிடிக்க முடியும் என்று அரசாங்கமே அறிவித்துள்ளது. ஜனாதிபதி உட்பட முக்கியமான அமைச்சர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்னும் கோணத்தில் அல்லாமல் இறந்தவர்களை நினைவுகூரலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
அந்த வகையில் வெறுமனே நினைவுகூர சென்ற போது சில பேர் நினைவுகூர முடியாது என பொலிசாரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் நினைவுகூருவதற்குரிய ஒரு சில ஒழுங்குபடுத்தல்களை செய்து சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டுவதற்கு தயாரான நிலையில், அவர்களை பொலிசார் தடுத்து திருப்பி அனுப்பியபோது அவர்கள் திரும்பி செல்கிறார்கள்.
அவ்வாறு திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது இடையில் அவர்களை மறித்து, அவர்கள் கொண்டு சென்ற கொடிகள் அவர்கள் பயணித்த வாகனத்தில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி, வாகன சாரதியை பிடித்துக் கொண்டு சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர். அந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு அவரை விடுதலை செய்ய பொலிசாரிடம் கோரிய போது - விடுதலைப் புலிகளை நினைவுகூர முயன்றதாகக் கூறி அவர்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இவை நியாயமானதா? அரசாங்கம் நினைவேந்தலை செய்யலாம் என்கிறது. பொலிசார் தடை கோரி நீதிமன்றங்களை நாடியபோது, விடுதலைப்புலிகளை நினைவுகூராமல் செய்யமுடியும்; என்று சொல்லியிருக்கும் நிலையில், மஞ்சன் சிவப்பு கொடிகளைக் காரணம் காட்டி விடுதலைப் புலிகளை நினைவு கூருவதாக சொல்கிறார்கள்.
மஞ்சள், சிவப்பு எமது கட்சியின் நிறங்கள். தமிழ்த் தேசியத்தின் நிறங்கள். இந்த விடயத்தைக் கூடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அணுகுகின்றீhகள் என்றால் இந்த விடயங்களை எங்கே கொண்டு சென்று நிறுத்தப்போகிறீhகள்? பிரபாகரன் என்று பெயரைச் சொல்லி கேக்கை விற்றதற்கும் வேண்டியதற்கும் அவர்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள். முன்னாள் போராளி குடும்பங்களுக்கும் மாவீரர்களுடைய குடும்பங்களுக்கும் உணவுப் பொதிகளை வழங்கினால் அதுவும் பயங்கரவாதமா? அப்படியாயின் கடந்த மாதம் நீதிமன்றம் ராஜபக்ஸ தரப்பை குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது.
ஒருவேளை எதிர்காலத்தில் ராஜபக்ஸக்களை குற்றவாளிகள் என்று அவர்களை சிறைக்கு தள்ளி அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்படுவதாக வைத்துக்கொண்டால், அவர்களுடைய ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் எவருமே சொந்தம் கொண்டாட முடியாதா? ராஜபக்ஸ தரப்பு தூக்குக்கு போனாலும் ராஜபக்ஸ தரப்பினுடைய அரசியலை நீங்கள் அடையாளப்படுத்துவதை ஒரு குற்றமாகக் கருத முடியுமா? இப்படியான விடயங்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாவிப்பதை நியாயப்படுத்த முடியுமா? கேக்கை வழங்குவதும், உணவுப் பொதிகளை வழங்குவதும், நினைவுகூருதலும், சிவப்பு மஞ்சள் கொடியைக் கட்டியதும் பயங்கரவாதமா?
நீதியமைச்சர் என்ற வகையில் அதுவும் நீங்கள் தான் 2015 இல் நீதியமைச்சராக இருந்தபோது ஜெனிவாவுக்கு சென்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருந்தீர்கள். அமுல்படுத்தமாட்டோம் என்று சொல்லிவிட்டு பொலிசார் இதே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எந்தவகையில் நியாயப்படுத்தப் போகிறீர்கள்?
எனவே இந்த இடத்தில் நீங்கள் தலையிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இதன்போது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பதிலளித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ரீ சேட்டில் பொறித்திருந்த படம் தொடர்பாக பொலிசார் தெரிவித்திருக்கிறார்கள். இவை உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள். மற்றவர்களுக்கும் கோபம் வரக்கூடிய விடயம். எனக் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் :
நான் கூறிய விடயம் கிழக்கு சம்பந்தப்பட்ட விடயங்கள். ஆனால் வடக்கு சம்பந்தபட்ட விடயத்திலும் கூட இப்படியான சம்பவம் நடந்திருந்தால், இதனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கொண்டு வரவேண்டுமா? இது தவறா? இல்லையா? என ஆராய்வதற்கு வேறு சட்டங்கள் இல்லையா? ஒரு படம் பொறித்த ஆடை அணிவது பயங்கரவாதம் தொடர்பான விடயமா? இதனைத் தான் ஒரு நியாயத்தின் அடிப்படையில் சிந்தியுங்கள் என்பதை தெரிவிக்கின்றேன்.
இன்று பொலிசார் தான் பயங்கரவாத கோணத்தில் செயற்படுகிறார்கள். இந்த சட்டங்களை தமது பழிவாங்கல்களுக்காகவும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகவும் படுமோசமாக பொலிசார் பயன்படுத்துகின்றனர். ஆகவே இந்த விடயத்தில் நீங்கள் தலையிடவேண்டும்.
ஏனெனில் நீங்களே உலகத்துக்கு ஒரு பொல்லாத சட்டமாக ஒப்புக்கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீங்கள் தான் தொடர்ந்தும் வைத்திருக்கிறீர்கள். அப்படியாயின் இவற்றை பாவிக்க முடியாது என்று நீங்கள் பொலிசாருக்கு தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.
ஒருவேளை - பெரும் சம்பவம் ஒன்று நடந்திருந்தால், வேறு ஒரு சட்டமும் இல்லாத இடத்தில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவிப்பதாக இருந்தால் அதனை நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இங்கே ஒரு சம்பவமுமே நடைபெறாமல் இருக்கும்போது, நீங்களே நினைவுகூரலை அனுமதித்திருந்த நிலையில் - நீதிமன்றங்களும் அனுமதித்திருந்த நிலையில் பொலிசார் அதனை பயங்கரவாதம் என்று கூறி பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.