மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும்! சுகாதார அமைச்சர்
சுகாதார கட்டமைப்பில் மருந்து தட்டுப்பாடு தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது. அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. முறையான வழிமுறைகளுக்கு அமையவே இனி மருந்து கொள்வனவு செய்யப்படும்.
முறையான திட்டமிடலுடன் மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரையில் தீர்வு எட்டப்படும். சுகாதார சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு வழங்கப்படும்.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன வலிறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது நாட்டின் சுகாதாரத்துறை ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
23 ஆயிரம் வைத்தியர்கள்,43 ஆயிரம் தாதியர்கள், உட்பட மருத்துவ கட்டமைப்பில் 1 இலட்சத்து 46 ஆயிரம் சேவையாளர்கள் உள்ளார்கள். நாட்டில் ஐந்து கிலோமீற்றர் தூரத்துக்கு இடையில் மருத்துவ சிகிச்சை நிலையம் அல்லது மருத்துவமனை இருப்பது சுகாதார துறையின் முன்னேற்றகரமான இலட்சினையாகும். நாட்டில் மருந்து தட்டுப்பாடு பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.
அவசர மருந்து கொள்வனவு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே இனி மருந்து கொள்வனவு செய்யப்படும். இதற்கான ஆலோசனைகள் தேசிய மருந்தக கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
தரமான மருந்து கொள்வனவுக்கும், தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சுகாதார கட்டமைப்பில் தற்போது பயன்பாட்டில் உள்ள 850 வகையான மருந்துகளில் 210 வகையான மருந்துகள் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆட்சியில் இருந்த கடந்த அரசாங்கங்கள் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்கள் முன்னெடுத்த செயற்திட்டங்களினால் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி பெருமளவிலான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். சுகாதார சேவையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்த எடுத்துக்காட்டல், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.
சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். பொருளாதார பாதிப்புகளினால் கடந்த ஆண்டு மந்தபோசனை வீதம் உயர்வடைந்தது.இதற்கு அறிவியல் ரீதியில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மந்த போசனை வீதம் 1.2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கும், முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கும் பகலுணவு வழங்குவதற்கு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 60 இலட்சம் பேர் விபத்துக்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதில் 10 இலட்சம் பேர் வீதி விபத்து, வீட்டு விபத்து மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வீதி விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களினால் மாத்திரம் வருடாந்தம் 12 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.
நாளாந்தம் குறைந்த பட்சம் 30 பேர் உயிரிழக்கிறார்கள். வீதி விபத்துக்களினால் 12 ஆயிரம் பேர் வருடாந்தம் உயிரிழப்பது என்பது பேரிழப்பாகும். வீதி விபத்துக்களை தடுப்பதற்கு துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். வீதி சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடித்தால் வீதி விபத்துக்குளை குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.