வரவு செலவுத் திட்டத்தில் வருமானச் செலவுகளை ஈடுசெய்வதற்கான முறை முன்வைக்கப்படவில்லை - சம்பிக்க ரணவக்க!

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வருமானச் செலவுகளை ஈடுசெய்வதற்கு குறிப்பிட்ட முறை எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும், இதனால் வருமானச் செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் வரி வலையமைப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தின் இன்றைய (29.11) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான திரு ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட உரையில் VAT வரி 03% அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, பெட்ரோல், டீசல், உரம், பால், மருந்துகள் என பல அத்தியாவசியப் பொருட்கள் இந்த புதிய VAT வரியில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரிகள் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% அதாவது 600 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி VAT மூலம் மாத்திரம் ஒருவரிடமிருந்து 30,000 ரூபாவை அரசாங்கம் அறவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வாழும் பொதுமக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்வது கடினமாக இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வங்கி முறையின் மறுமூலதனமாக்கலுக்கு 450 பில்லியன் தேவைப்படுவதாகவும் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கான கடனைத் திருப்பிச் செலுத்தாதது குறித்து விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.
செலுத்தப்படாத கடன் தொகை 700 பில்லியன் எனவும், இந்தக் கடன்களை அறவிடாமல் பொது வரிகள் மூலம் வங்கிகளுக்கு மறுமூலதனமாக்குவது மிகவும் நியாயமற்றது எனவும் தெரிவித்தார்.



