மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கோபால் பாக்லே திடீர் விஜயம்!
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு இலங்கையில் இருந்து வெளியேற உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் (29.11) மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அவர், மாவட்ட பொது வைத்தியசாலையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன் ஆகியோரை சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள், தேவைகள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நீண்ட கால தேவையாக உள்ள விபத்து மற்றும் அவசர பிரிவு நிர்மாணிப்பதற்கான நிதி உதவி, ஸ்கேன் இயந்திரம் பெற்றுக்கொள்வதற்கான நிதி உதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் மிகவும் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலையின் பணியாளர்கள், உத்தியோகத்தர்கள் மிகவும் குறைந்த அளவில் இருக்கின்ற போதும் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்குவதை யொட்டி தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.