அம்பாறை பிரதேச செயலகர் பிரிவை தனியாக அங்கீகரிக்க ஏன் முடியாதுள்ளது? கஜேந்திரகுமார் கேள்வி

#SriLanka #Parliament #Ampara #Gajendrakumar Ponnambalam #Gajenthirakumar
Mayoorikka
1 year ago
அம்பாறை பிரதேச செயலகர் பிரிவை  தனியாக அங்கீகரிக்க ஏன் முடியாதுள்ளது? கஜேந்திரகுமார் கேள்வி

பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய அம்பாறை பிரதேச செயலகர் பிரிவை தனி பிரிவாக அங்கீகரிக்க ஏன் உங்களால் முடியாதுள்ளது? என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 பொதுநிர்வாக அமைச்சுக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 1989 ஆண்டு புதிய பிரதேச செயலர் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது. 1993 இல் அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அங்கீகரிக்கப்பட்ட தனி பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டு அது உத்தியோகபூர்வமாக இயங்கி வந்தது.

 காலப்போக்கில், முழுமையாக பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்குரிய கணக்காளர் போன்ற முக்கியமான நியமனங்களை அதற்கென வழங்காமல், அரசியல் காரணங்களுக்காக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவுக்கு நியமனம் செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலம் உப பிரிவாகவே செயற்பட்டு வருகின்றது.

 இதனால் மக்களுக்கு தேவையான நிர்வாகத்தை நடத்தமுடியாமலும், அரசியல் காரணங்களால் பழிவாங்கல்களும் நடைபெற்று வருகின்ற நிலையில், கடுமையான பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள். 

 இதன் காரணமாக, ஏற்கனவே வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்த முடிவை அழுல்படுத்துவதற்கு இன்றைக்காவது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இந்தவிடயத்தை பல வருடங்களாக கேட்டுக் கொண்டு வருகின்றோம். 

ஆனாலும் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் கிடையாது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பிரிவுகள், சிங்களப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

images/content-image/2023/11/1701228370.jpg

 சட்டவிரோத குடியேற்றங்கள் நடந்திருந்தும்கூட அந்த சட்டவிரோதமான செயலை சட்டபூர்வமாக்குகின்ற வகையில் அந்தப் பிரிவுகளை உருவாக்க முடியுமானால், இயல்பாகவே - பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய பிரதேச செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன் உங்களால் முடியாதுள்ளது? என்ற கேள்வியை பிரதமர் அவர்களுடைய பொதுநிர்வாக அமைச்சுக்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். 

 இன்று உலகத்துக்கு நல்லிணக்கத்தைப் பற்றி பேசுகின்ற நீங்கள் இதையாவது செய்யுங்கள். அரசியல் காரணங்களுக்காக - இந்த அநியாயங்கள் தமிழ் மக்களுக்கு தொடர்வதை அனுமதிக்கவேண்டாம். வேறு தரப்புகளுக்கு கிடைக்கக் கூடிய அங்கீகாரங்களை நாம் ஒருபோதும் தடுப்பவர்களல்ல. எங்களுக்கு தேவைப்படும் விடயத்தையே நாங்கள் கேட்கின்றோம். அடுத்த விடயமாக - கடந்த ஒரு வாரமாக மாவீரர் வார நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நேற்றைய தினம், 27 ஆம் திகதி,; வடக்கு கிழக்கு முழுவதிலும் - தமிழ் மக்கள் தங்களது எதிர்காலத்துக்காக உயிர்த்தியாகம் செய்த உறவுகளை நினைவு கூர்ந்து வந்திருந்தனர்.

 தாங்களாகவே தங்களது சொந்த செலவில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் - சிறிலங்கா அரசின் இனவாத போக்கால் அனைத்து துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல்களைத் தடைசெய்யவதற்காக - பொலிசார் நீதிமன்றங்களை நாடும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன. நீதிமன்றங்கள் தடைகளை வழங்கியிருந்தாலும், பின்னர் எங்களது நியாயங்களை பதிவு செய்து அந்தத் தடையை நீக்க நாங்கள் கோரியிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை நினைவுகூராமல் நினைவேந்தலை செய்யமுடியும் என்றே தீர்ப்புகளை வழங்கியிருந்தது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை சம்பூரில் மட்டும் தான் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. அம்பாறையில் நினைவேந்தலை தடைசெய்யுமாறு கோரியிருந்த பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கபட்டிருந்தது.

 மட்டக்களப்பில் தடைசெய்யப்பட்ட அமைப்பையோ அடையாளங்களையோ நினைவு கூரக்கூடாது என்றே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அப்படியிருக்க , கிழக்கு மாகாணத்தில் முழுமையாக தடை வழங்கப்பட்டிராதபோதும் பொலிசார் குறித்த நிகழ்வுகளை குழப்பும் வகையிலேயே செயற்பட்டிருந்தனர்.

 பல இடங்களில் துயிலுமில்ல காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு படுமோசமாக அவமதிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றிருந்தன. அனைத்து துயிலுமில்லங்களிலும் இருந்த கல்லறைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தனியாரின் காணிகளில் தனியாருடைய அனுமதி பெற்று நினைNவுந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் கூட நினைவேந்தல்கள் செய்வதற்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. 

ஆகவே இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, இந்த அரசாங்கம் துயிலுமில்லங்கள் அமைந்திருந்த அரச காணிகள் அனைத்தையும் நினைவேந்தல் செய்வதற்குரிய காணிகளாக அங்கீகரித்து அதற்கென ஒதுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். 

 அதேவேளை – நினைவேந்தல்கள் மூலம் மக்கள் தமது மரியாதைகளை செலுத்துவதற்குரிய வகையில் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ள துயிலுமில்ல காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். நினைவேந்தல் உரிமையை அங்கீகரிப்பது நல்லிணக்கத்துக்கு மிக முக்கியமான விடயமாகும். இவ்விடயம் நிலைமாறுகால நீதி பொறிமுறையின் ஐந்தாவது தூணுமாகும். நினைவுகூருகின்ற துயிலுமில்லங்களை அழிப்பதோ, அல்லது நினைவேந்தல்களைத் தடைசெய்வதோ மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றமாகும். 

ஆகவே - இது தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. போர் முடிவடைந்துது 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஜே.வி.பி. க்கு அவர்களுடைய ஆயுதப் போராட்டம் முடிவடைந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே அவர்களை நினைவு கூர அனுமதிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், தங்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர விடாமல் தமிழ் மக்களைத் தடுப்பது என்பது இனவாதத்தைத் தவிர வேறொன்றுமாக இருக்க முடியாது. 

ஜே.வி.பி. சிங்கள அமைப்பு என்பதற்காக அனுமதிக்கிறீர்கள். ஆனால் தமிழர்கள் என்ற வகையில் எமது நினைவேந்தல்களை திட்டமிட்டுத் தடுக்கிறீhகள். இப்படிப்பட்ட பாரபட்சங்களை நீங்கள் நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

 போர் முடிவடைந்த பின்னர் மிகச்சிறந்த நிலைக்கு செல்லவேண்டிய நாடு, இன்றைக்கு தலைகுப்புற விழுந்திருக்கிறதென்பது, உயிரிழந்த ஆத்மாக்களின் சாபங்களேயாகும். புத்த பெருமான கூட வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்குத் தான் உங்கள் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. 

இனவழிப்பை செய்தவர்களை காவலர்களாக சிங்கள மக்கள் கருதினார்கள். ஆனால் இன்று சிங்கள மக்களுக்கே துரோகம் அளித்தவர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்டனர்.

 இனியாவது விளங்கிக்கொண்டு, உங்களின் மிக மோசமான இனவாதப் பாதையை விட்டு திருத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!