அமைச்சரவை அமைச்சரும் பேசுவதற்கு சுதந்திரமில்லாத நபராக மாறிவிட்டார்! சாணக்கியன்

அமைச்சரவை அமைச்சரும் இன்று பேசுவதற்கு சுதந்திரமில்லாத நபராக மாறிவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்றையதினம் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனநாயகத்தில் மக்கள் பேசும் உரிமை, பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் குறித்து பேசுவது கேலிக்கூத்தான நிலை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களின் பிரதிநிதிகளான 30 அமைச்சரவை அமைச்சர்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை எனில், மக்களின் சுதந்திரம் குறித்து அவர்களினால் பேசமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் கொள்கை எதுவாக இருப்பினும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் தெரிவித்த அறிக்கையினால் அமைச்சர் பதவி பறிபோனமையானது அமைச்சரவையில் பேச்சு சுதந்திரம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.



