தேர்தலில் தவறான தெரிவு மீண்டும் நாட்டை வாங்குகுரோத்து நிலைக்கு தள்ளும்!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறந்த ஒருவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் .தவறான ஒருவரை தெரிவு செய்தால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கே நாடும் மக்களும் சேல்ல வேண்டி ஏற்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த தீர்ப்பை நான் ஆராய மாட்டேன். ஆனால் அந்த தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பஷில் ராஜபக்ஷ , அஜித் நிவாரட் கப்ரால் மற்றும் பி.பி.ஜயசுந்தர தொடர்பில் சில விடயங்களை வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டாம் என 2006 ஆம் ஆண்டு நான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அழுத்தமாக வலியறுத்தினேன்.
ஆனால் ஒரு சிலரது தவறான ஆலோசனைகளை தொடர்ந்து அவரை ஆளுநராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார். இரண்டாவது நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பி.பி. ஜயசுந்தர ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அரச நிர்வாகி என்று கோப் குழு விசாரணை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.
அரச பதவிகளுக்கு இவர் தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பொருட்படுத்தாமல் இவருக்கு அரச உயர் பதவி வழங்கப்பட்டது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதிகள் நால்வருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அண்மைகாலமாக தீர்ப்பளித்துள்ளது. இது சிறந்த முன்மாதிரியல்ல.
ஹோட்டர்சேஜ் காணி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது பொருளாதார பாதிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ ,கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றார்.