ஈரானில் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ பரவலால் 27 பேர் பலி

ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில்உள்ள லாங்ரூட் நகரில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வானம் புகை மண்டலமாக காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான கார் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.



