இலங்கை வரும் இந்திய நிதியமைச்சர் : மலையகத்திற்கு பயணிக்கவுள்ளதாகவும் தகவல்!
இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார் எனவும், அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யவும், அங்கு State Bank of India வின் கிளையொன்றையும் திறந்துவைக்கவும் உள்ளதாகவும் அவர் அவ் ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை கொழும்பில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மலையகம் 200' நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளையும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பார் எனவும் அறிய முடிகிறது.
இந்திய நிதி அமைச்சர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலையில் இந்தியா முன்னெடுத்துவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வுகளை நடத்த உள்ளதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரின் வருகையால் மலையக மக்களுக்கு சில தூங்கிக் கிடக்கும் திட்டங்கள் கண் விழிக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.