பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள்!
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதன்கிழமை (நவம்பர் 01) பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாளை கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும் என ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடர்பான விபரங்களை வழங்கிய அவர், இலங்கை மின்சார சபையை 14 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
“அது இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மின் உற்பத்தி நிலையம் நான்கு விநியோக முனையங்களைக் கொண்டுள்ளது.
இந்த நான்கையும், லீகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விநியோக முறையையும் இந்திய டாடா நிறுவனத்துக்கு விற்கப் போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. டிரான்ஸ்மிஷன் பிரிவை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நொரோச்சோலை அனல் மின் நிலையத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
மீதமுள்ள ஆறு நிறுவனங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை பிரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன” என்று ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி மின் உற்பத்தி நிலையங்கள் தனித்தனியாக வழங்கப்படும் என தெரிவித்த அவர், நாளைய தினம் இலங்கை மின்சார சபை ஸ்தாபிக்கப்பட்ட 54 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இது முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“அன்றைய தினம் அனைத்து ஊழியர்களையும் கொழும்புக்கு வருமாறு கூறியுள்ளோம். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலைய அலுவலக ஊழியர்களும் நண்பகல் 12 மணிக்கு மாபெரும் கண்டன இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளனர்” என ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.