முல்லைத்தீவில் நடைபெற்ற உலக சமாதான நிகழ்வு

#SriLanka #Event #Mullaitivu #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
10 months ago
முல்லைத்தீவில் நடைபெற்ற உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. உலக சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக சமாதான நாளான இன்று கடந்த கால யுத்தத்திலே பாதிக்கப்பட்டு அதிகமான மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையிலே இருக்கும் முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே உலகசமாதான நிறுவனமும், ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து குறித்த நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

 சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் அனைத்து இனங்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டு இருந்தன. தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மிகவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் 180 பேருக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களை மகிழ்விப்பதற்கான இராணுவத்தினரின் இசை நிகழ்வும் விருந்துபசாரமும் நடைபெற்றிருந்தது.

 குறித்த நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்),புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந் முல்லைத்தீவு இராணுவ பாதுகாப்பு தலைமையக பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜெயவர்த்தன கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலாளர், துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், சர்வமத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.