அனுராதபுரத்தில் இருகார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 8 பேர் படுகாயம்
அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியின் ஆலங்குளம் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 வயது குழந்தை மற்றும் 38 வயதான கார் சாரதி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த காரின் சாரதியான அனுராதபுரம் நீர்ப்பாசன அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் உறங்கியதால் வீதியை விட்டு விலகி அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவ்விபத்து நேற்று (27) இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு கார்களில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் மீட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இரண்டு கார்களின் சாரதிகளும் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.