தையிட்டியில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி சுகாஸை இருட்டறையில் வைத்த பொலிஸார்!
யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணி சுகாஸ் உட்பட ஒன்பது பேர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் மல்லாகம் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் சட்டதரணி சுகாஷ் தெரிவிக்கும் போது, தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இரண்டு பேர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எனக்குத் தெரிவித்ததற்கமைய அவர்களின் வழக்கில் ஆஜராகுவது சம்பந்தமான அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காகச் சட்டத்தரணி உடையுடனும், ரையுடனும் சென்று தனியார் காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது தான் பொலிஸார் என்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.
ஆகவே, பொலிஸாரின் கைது சட்டவிரோதமெனவும், அதுமாத்திரமன்றிப் பொலிஸார் என்னைக் கைது செய்து 24 மணித்தியாலங்களில் நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை, 24 மணித்தியாலங்களின் பின்னர் தான் நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள் எனவும் சுட்டிக் காட்டினார்.
எனவே, நீதிமன்றத்தின் கட்டளையை எந்தவகையிலும் மீறாத என்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்த பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரைக் கொண்டதாக ஒரு விசாரணையை நடாத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைச் செவிமடுத்த நீதவான் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதுமாத்திரமன்றிப் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒரு கொலை வழக்கும், ஒன்பது மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களும் காணப்படும் நிலையில் கைதான ஏனைய எட்டுப் பேரையும் வேறொரு இடத்திலும், என்னைத் தனியாக இருட்டறையொன்றிலும் அடைத்து வைத்தமை என் உயிருக்கு அச்சுறுத்தலான விடயம் எனவும் சுகாஷ் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
சட்டத்தரணிகளின் நீண்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஊடகவியலாளர்களும், சட்டத்தரணிகளும் தமது கடமைகளைச் செய்யும் போது
அதனை விளங்கிக் கொண்டு பொலிஸார் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை மல்லாகம் நீதிமன்ற நீதவான் திருமதி.காயத்திரி சைலஜன் விடுத்ததுடன் போராட்டக்காரர்களும், பொலிஸாரும் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் படி செயற்படலாமெனவும் உத்தரவிட்டார்.