அலி சப்ரி ரஹீம் கொண்டு வந்த தங்கப் பொருட்களின் மதிப்பு ஏழரை கோடி: வரலாற்றில் இது இரண்டாவது தடவை
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்களின் பெறுமதி 7 1/2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படும் போது, அவரிடம் 3 கிலோ 500 கிராம் தங்கம் இருந்தது, அதில் தங்க பிஸ்கட் மற்றும் தங்க நகைகள் இருந்தன.
1 கிலோ எடையுள்ள 1 தங்க பிஸ்கட், 100 கிராம் எடையுள்ள 13 தங்கத் துண்டுகள் மற்றும் 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கப் பொருட்கள் இருந்ததாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரான எம்.பி.யின் பயணப் பொதியில் தங்கப் பொருட்களுக்கு மேலதிகமாக 91 நவீன கையடக்கத் தொலைபேசிகள் இருந்ததாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது பயணப் பையில் இந்தத் தங்கத்தை கவனமாகப் பொதி செய்ததாகவும், பல கையடக்கத் தொலைபேசிகளின் பேட்டரிகள் அகற்றப்பட்டதோடு, சில தங்கப் பொருட்களும் அந்தப் பையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஐபி டெர்மினல் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பு சுங்கத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல தடவைகள் கவனமாக தங்கப் பொருட்களை கொண்டு வந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் விஐபி முனையத்தைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய அளவிலான தங்கப் பொருட்கள் கொண்டுவரப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்று சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் 1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர டேனியல் இலங்கைக்கு இவ்வாறு தங்க சுமை கொண்டு வரும்போது கைது செய்யப்பட்டிருந்தார்.