காங்கேசன்துறையில் களவுகளை தடுக்க வராத பொலிஸார் போராட்டம் என்றதும் வன்முறையால் ஒடுக்கி வருகின்றனர்: மக்கள் விசனம்
காங்கேசன்துறையில் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நடேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டு வளவுகளில் உள்ள பெறுமதியான மரங்கள், வீட்டின் பல்வேறு பெறுமதியான பகுதிகள் திருடர்களால் தினமும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதி மக்களால் பலாலி பொலிசாருக்கு பல தடவைகள் அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நடேஸ்வராக் கல்லூரி வீதியில் உள்ள வீடுகளில் தினமும் பகலிலும் இரவிலும் அதிகளவில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தொடர் கொள்ளைகளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பலாலி பொலிசார் இன்று தையிட்டியில் இடம்பெற்று வரும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை வன்முறைகளை பிரயோகித்து ஒடுக்கி வருகின்றதாகவும் காங்கேசன்துறை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கல்லூரி வீதியின் ஒரு பகுதி காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிலும் மற்றைய பகுதி பலாலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





