மஞ்சள் கோட்டைத் தாண்டிய தந்தையையும் மகனையும் கொன்ற அரசியல்வாதி விளக்கமறியலில்
கண்டி தர்மராஜ வித்தியாலயத்திற்கு முன்பாக தந்தையும் மகனும் மஞ்சள் கோட்டின் குறுக்கே நடந்து சென்றபோது விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி அமைப்பாளர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கராத்தே பயிற்றுவிப்பாளருமான காமினி விஜய பண்டாரவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று முன்தினம் (16ஆம் திகதி) இரவு 08.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மஞ்சள் விளக்கு மாறும் போது கவனக்குறைவாக ஓட்டி வந்த ஜீப் தந்தை மற்றும் மகன் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டிஇ பௌவேலிக்கடை சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய சந்திக சம்பத் ரொட்ரிகோ என்ற நபரும், இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அவரது 11 வயது மகனான விமந்த ரொட்ரிகோவும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன அமைப்பாளர் கராத்தே பயிற்றுவிப்பாளர் என்பதுடன், அவரால் நடத்தப்பட்ட கராத்தே வகுப்பு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.