திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மிக உணர்வுபூர்வமாக இடம்பெறுகி கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவிருந்தது.
இந்த நிலையில் குறித்த உணர்வுபூர்வமான குறித்த நிகழ்விற்கு திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருகோணமலை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் கே பியரன்ன தொடுத்த வழக்கின் பிரகாரம், அதனை பரிசீலித்த நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இன்றையதினம் திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சுகாதார நிலைமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம் ஆசிரியர் உட்பட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் உட்பட 13 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.