மோகா புயலால் வங்கதேசம் மற்றும் மியான்மார் கடுமையாக பாதிப்பு
மோகா புயல் காரணமாக வங்கதேசம், மியான்மார் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தாழ்வான கரையோரப் பகுதிகளில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணிக்கு சுமார் 209 கிலோமீட்டர் வேகத்தில் மியான்மாரின் கடலோரப் பகுதிகளை சிறிய புயல் தாக்கியுள்ளது.
சூறாவளி காரணமாக மியான்மாரில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கதேசத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜாரில் 1,300க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷின் தென்கிழக்கு பிராந்தியத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீடுகளை விட்டு வெளியேறிய பலர் மாடுகள், கோழிகள், ஆடுகள் மற்றும் உறங்கும் பாய்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதைக் காணமுடிந்ததாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்தன.
சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. பல நகரங்களில் மின்சாரம், தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட பல பொதுச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மோகா புயலின் முழு தாக்கம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.