எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: 6.4 பில்லியன் டொலரை பெற்றுக் கொள்வது சந்தேகம்
கடல் மார்க்கத்தில் ஏற்படும் விபத்துக்களின் போது நஷ்டஈட்டு தொகையை வரையறுத்துக் கொள்ளும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தில் சிங்கப்பூர் கைச்சாத்திட்டுள்ளதால் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து விவகாரத்தில் 6.4 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியது என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யும் சுற்றாடல் துறை தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை தெரிவு குழு தலைவருமான அஜித் மானப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் 2021.05.20 ஆம் திகதி முதல் 2022.11.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு 6.48 பில்லியன் டொலர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை (மீபா)சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் நஷ்டஈடு பெற்றுக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களின் செயற்பாடு அதிருப்தியளிக்கிறது.
கப்பலின் உரிமை நிறுவனம் சிங்கப்பூரில் உள்ளதால் அங்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என பொறுப்பான தரப்பினர் குறிப்பிடுகின்ற போதும் தேசிய மட்டத்தில் பல தரப்பினர் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக எமது நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
நாம் ஏன் 4.5 மில்லியன் டொலர் கடன் பெற்று ஏன் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்? கப்பலின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து வழக்கு விசாரணையில் முன்னிலையாகும் போது கடன் பெற்று சிங்கப்பூருக்கு ஏன் செல்ல வேண்டும் ? இந்த வழக்கு விவகாரத்தில் வாதாடும் தன்மை இலங்கையில் இல்லை என நீதியமைச்சர் விஜயதாஸ குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது.
எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் மண்ணெண்ணெய் உடலில் பட்ட சாரைபாம்பை போல் நீதியமைச்சர் கலக்கமடைகிறார். இவரது செயற்பாடு பிரச்சினைக்குரியது.
பல விடயங்கள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன. நஷ்டஈட்டை குறைத்துக் கொள்ள கப்பல் நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இலங்கை 6.4 பில்லியன் டொலர் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடல் மார்க்கத்தில் ஏற்படும் விபத்துக்களின் போது நஷ்டஈட்டு தொகையை வரையறுத்துக் கொள்ளும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தில் சிங்கப்பூர் கைச்சாத்திட்டுள்ளது. ஆகவே இந்த விவகாரத்தில் 6.4 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியது.
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் விவகாரம் தொடர்பில் நானே நீதியமைச்சரிடம் குறிப்பிட்டேன். நல்லாட்சி அரசில் செய்ததால் அவர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எமது அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர் என்ற காரணத்தால் அவரிடம் குறிப்பிட்டேன். ஆனால் அதை அவர் எனக்கு எதிராக திருப்பினார்”
என்றார்