இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைகுமாறும் ஐநாவில் கஜேந்திரகுமார் கோரிக்கை

இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைகுமாறும் கோரப்பட்டுள்ளது
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்வதாகவும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 52 ஆவது அமர்வில் நேற்று உரையாற்றும்போது அவர் சுட்டிக்காட்டினார்
இலங்கையில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் முடிவடைந்துள்ளநிலையில், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது.
இலங்கையின் நீதிமன்ற கட்டளையினை மீறி, தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையானது அழிக்கப்பட்டு அங்கு ஒரு பௌத்த விஹாரை அமைக்கப்பட்டுள்ளது.
நாயாறு, தையிட்டி, நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சள் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று போன்ற தமிழர் தாயக நிலங்களிலும் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கை அரசாங்க ஆதரவுடன் சிங்களவர்களால் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்போது சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர்.
இந்த நிலம் சிங்கள பௌத்தமயமாக்கலுக்கான பகுதியாக குறிவைக்கப்பட்டு அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வவுனியா வெடுக்குநாறி மலை, பௌத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து அதனை சிறிலங்கா அரசாங்கத்தின் தொல்பொருட்திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.
எனவே இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைகுமாறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



