அயர்லாந்து ஜனாதிபதித் தேர்தல் சொல்லும் சேதி- சுவிசிலிருந்து சண் தவராஜா
அயர்லாந்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிட்ட இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட கதரின் கொனோலி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
7 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கான ஒன்பதாவது தேர்தல் அக்டோபர் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தற்போதைய ஜனாதிபதியாக உள்ள மைக்கல் டி.ஹிக்கின்ஸ் இரண்டு ஏழாண்டுகள் பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவரால் இம்முறை போட்டியிட முடியாமல் முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில் களத்தில் மூன்று வேட்பாளர்கள் போட்டியில் இறங்கினர். 1990ஆம் ஆண்டின் பின்னர் தற்போதைய தேர்தலே மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலாக விளங்கியது. கொனோலி அம்மையாரை எதிர்த்து ஹீதர் ஹம்பிறிஸ் அவர்களும் ஜிம் கவின் அவர்களும் களம் கண்டனர்.
வாடகை வீட்டில் குடியிருந்த கவின் அவர்கள் தனது வீட்டு உடைமையாளருக்கு 3,300 ஸ்ரேலிங் பவுண்ஸ் பணத்தைத் தராமல் விட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
போட்டியிலிருந்து விலகுவதற்கான காலக்கெடு செப்டெம்பர் 24 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது அறிவிப்பு அக்டோபர் 5ஆம் திகதியே வெளியானது. நிஜமான போட்டி இரண்டு பெண் போட்டியாளர்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருந்த போதிலும், தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் கவினின் பெயரும் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1973ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் இரண்டு வேட்பாளர்கள் மாத்திரம் களம் கண்ட இந்தத் தேர்தலில் 45.8 விழுக்காடு மக்கள் வாக்களித்திருந்தனர்.
இதில் 63.36 விழுக்காடு வாக்குகளை கொனோலி பெற்றிருந்தார். மொத்தமாக அவர் பெற்றிருந்த 914,143 வாக்குகள் 1938ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்ட காலத்தின் பின்னர் ஒருவர் பெற்ற அதி கூடிய வாக்குகளாக வரலாற்றில் பதிவாகி உள்ளது. நவம்பர் 11இல் நாட்டின் பத்தாவது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ள அவர் அயர்லாந்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் மூன்றாவது பெண்மணி என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இவருக்கு சின் பெய்ன் உட்பட இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன.
68 வயது நிரம்பிய இவர் 2016ஆம் ஆண்டு முதல் கல்வே தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் முதலில் ஐரிஷ் மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் தனது உரையை ஆற்றியிருந்தார்.
“அவசியமான வேளைகளில் பேசுகின்ற, காது கொடுத்துக் கேட்கின்ற, வினையாற்றுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் ஜனாதிபதியாக விளங்குவேன். நான் சமாதானத்துக்கான குரலாக விளங்குவேன். அதேபோன்று காலநிலை மாற்றம் காரணமாக எழுந்துள்ள அபாயத்தைத் தடுக்கும் குரலாகவும் இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது இடத்தைப் பெற்ற ஹம்பிறிஸ் 29.5 விழுக்காடு வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார். இவர் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 424,987. இவர் தனது சொந்தத் தொகுதியான கவன்-மொனாகன் தொகுதியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் 2011 முதல் 2024 வரை விளங்கியமை குறிப்பிடத்தக்கது. கவின் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திந்த போதிலும், அவரது பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெற்றிருந்த நிலையில் 103,568 பேர் அவருக்கு வாக்களித்து இருந்தனர். அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7.18 விழுக்காடு ஆகும். அதேவேளை, ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கும் வகையில் 213,738 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாகப் பதிவாகி உள்ளன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இது 12.9 விழுக்காடு ஆகும்.
அயர்லாந்து வரலாற்றைப் பொறுத்தவரை இது புதிய போக்காகப் பதிவாகி உள்ளது. மொத்தத்தில் வாக்களித்த மக்களில் 20 விழுக்காடு வாக்குகள் செல்லுபடியாத வாக்குகளாக உள்ளன. கவின் அவர்கள் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றிருந்த போதிலும், அவருக்கும் 7 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்திருந்தமை தற்செயல் நிகழ்வா அல்லது தேர்தல் மூலம் ஏதாவது ஒரு செய்தியைத் தெரிவிக்க மக்கள் நினைத்தார்களா என்பது சிந்தனைக்கு உரிய விடயம்.
அதேபோன்று, அயர்லாந்து போன்ற முன்னேறிய ஒரு நாட்டில் 12 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் செல்லுபடியாத வாக்குகளாகப் பதிவாகிய விடயத்தையும் தற்செயல் நிகழ்வு எனக் கருதிப் புறக்கணித்துவிட முடியாது.
3.6 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதிலும் 50 விழுக்காட்டுக்கும் குறைவான மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டதும், 20 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பை ஏதோவொரு விதத்தில் புறக்கணித்தமையும் அயர்லாந்தில் வாக்காளர்கள் மத்தியில் நிலவும் விரக்தி மனோநிலையைப் பிரதிபலிப்பதாக அரசியல் கட்சிகள் பலவும் கருத்து வெளியிட்டுள்ளமையைப் பார்க்க முடிகின்றது.
2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 10 மடங்காக அதிகரித்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ஏற்கனவே பல பத்திகளிலும் எடுத்துக் கூறியதைப் போன்று வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் குறைந்து வருவது ஒரு உலகளாவிய போக்காக உள்ளதை அவதானிக்க முடிகின்றது. தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்களின் ஆர்வம் குறைவது, அல்லது தேர்தல்களை உதாசீனம் செய்வது என்பன போன்ற அம்சங்களும் உற்று நோக்கத்தக்கவை. அயர்லாந்தைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவி என்பது நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஒரு கௌரவப் பதவியாகவே உள்ளது.
எனினும் நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் இடத்தில் ஜனாதிபதி உள்ளார். ஏனைய நாடுகளின் தலைவர்களோடு பேச்சுக்கள் நடத்தும் பொறுப்பு அவரிடமே உள்ளது. அவரது குரலுக்கு உலக அரங்கில் ஒரு முக்கிய இடம் இருக்கவே செய்கிறது. பலஸ்தீனத்தில் நடைபெற்றுவரும் இனப் படுகொலை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பவராக கொனோலி உள்ளார். இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை ஆரம்பம் முதலே எதிர்த்து இவர் குரல் கொடுத்து வருபவராக உள்ளார்.
இஸ்ரேலின் அண்மைக்கால நடவடிக்கைகள் உலக அரங்கில் பலத்த கண்டனங்களைச் சந்தித்துவரும் நிலையில் அத்தகைய குரல்களோடு ஒரு புதிய குரல் ஐரோப்பிய மண்ணில் இருந்து மேலதிகமாகச் சேர இருப்பது இஸ்ரேலையும், அதன் நண்பர்களையும் பொறுத்தவரை ஒரு நல்ல செய்தியாக இருக்க முடியாது. அதேவேளை, தொடர்ந்து அதிகரித்துவரும் பலஸ்தீன ஆதரவுக் குரல்களோடு கொனோலி அம்மையாரின் குரலும் ஒரு வலுவான குரலாக இணைந்து கொள்வது உலக அரங்கில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அது மாத்திரமன்றி, உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பா தன்னை இராணுவ அடிப்படையில் பலப்படுத்தி வருவதை எதிர்ப்பவராகவும் இவர் உள்ளார்.
ரஸ்யப் படையெடுப்பைக் கண்டிக்கும் கொள்கையில் இவர் உள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைக்கு இராஜதந்திர அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இவரின் நிலைப்பாடாக உள்ளது.
கொனோலி அவர்கள் எதிரணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் பேராதரவுடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஆளுங் கட்சிக்கான ஒரு முக்கிய செய்தியைச் சொல்லிச் செல்கிறது. தங்களின் போக்கை ஆளுங் கட்சி மாற்றிக் கொள்ளாவிடில் அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டிய சூழல் உருவாகும் என்பது நிச்சயம். உலகில் அதிக எண்ணிக்கையான மக்கள் போர்களை எதிர்ப்பவர்களாக, வெறுப்பவர்களாகவே உள்ளனர்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக மக்கள் தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தியே வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களின் செவிகளில் மக்களின் குரல்கள் கேட்பதில்லை என்பதே அவலமாகத் தொடர்கிறது.
அயர்லாந்து மக்களின் குரல் ஜனாதிபதித் தேர்தல் ஊடாக மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அயர்லாந்து அரசாங்கமும், ஏனைய மேற்குலக நாடுகளும் புரிந்து கொண்டால் உலகிற்கே நல்லது.
-சுவிசிலிருந்து சண் தவராஜா-
(வீடியோ இங்கே )
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    