முன்னாள் எம்பி ஜே.ஸ்ரீ ரங்கா கைது
-1-1.jpg)
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்தி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார்.
வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்.
விபத்தின் பின்னர், வாகனத்தை பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டியதாக முன்னாள் எம்.பி வாக்குமூலம் அளித்திருந்தார்.
எவ்வாறாயினும், அந்த வாகனத்தை எம்பி ஓட்டிச் சென்றது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பில் சாட்சியமளித்த இருவருக்கு முன்னாள் எம்.பி தொலைபேசி அழைப்பு விடுத்து செல்வாக்கு செலுத்த முயன்றமை தெரியவந்துள்ளது.
அதன்படி, இன்று கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



