இன்றைய வேத வசனம் 28.02.2023: நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 28.02.2023: நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு

சீர்திருத்தத் திருச்சபைகள் உருவாக காரணமாக அமைந்தது பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்கப்பட்டது தான் எனலாம்.

ரோமானிய திருச்சபை ரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மாபெரும் மண்டபம் ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தது. இதன் கட்டுமான செலவுகளுக்காகவும் போப்பாண்டவரின் ஆடம்பர செலவுகளுக்காகவும் அதிக பணம் தேவைப்பட்டது.

1514 ஆம் ஆண்டு நிதி திரட்டுவதற்காகப் போப்பாண்டவர் பத்தாம் லியோ  ஆணையின்படி பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்கப்பட்டன.

இந்தச் சீட்டுகளை பணம் கொடுத்து வாங்குவதின் மூலம் நமது பாவங்களிலிருந்து பாவமன்னிப்பைப் பெறலாம் என்று போதனை செய்யப்பட்டது!

இதுவரை செய்த பாவங்களுக்காகவும், இனி செய்யப் போகிற பாவங்களுக்காகவும் மன்னிப்பை பெறலாம் என்றும் போதித்தனர்.

அதுமட்டுமல்ல, நமக்கு முன்னே மரித்துப்போன உறவினர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் பாவமன்னிப்புச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன.

பணம் கொடுத்து பாவமன்னிப்பை பெற முடியும் என்பது வசதி என்று நினைத்த மக்கள் சீட்டுக்களை வாங்கி குவித்தனர்! திருச்சபையில் பணமும் குவிந்தது!

ஒவ்வொரு கிராமத்திலும் பாவமன்னிப்புச் சீட்டிருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
மேளதாளங்களுடன் படைகள் சூழப் போப்பாண்டவரின் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்ட சிலுவையை ஒரு துறவி ஏந்திவர, அவர் பின்னே மற்றொரு துறவி பட்டு மெத்தையில் வைக்கப்பட்ட போப்பாண்டவரின் அதிகாரப் பத்திரத்தை எடுத்து வருவார்.

ஆலயத்தை அடைந்தவுடன் அந்த சீட்டை விற்கும் நபர் கணீரென்ற குரலில் பேசத் துவங்குவான்!
நரகத்தில் ஆத்துமாக்கள் சந்திக்கும் கொடூரங்களை அவன் விவரிக்க, விவரிக்க கேட்பவர்களின் உள்ளத்தை பயம் கவ்விக்கொள்ளும்! பாவத்தில் இருந்து தப்புவது எப்படி என்று மனம் கலங்குவர்.

அவ்வேளையில் "இதோ உங்கள் பாவங்களை அழிப்பதற்கும், தண்டனையிலிருந்து உங்களை தப்புவிப்பதற்கும் போப்பாண்டவர் அருளிய பாவமன்னிப்புச் சீட்டு" என்று கூறி விற்கத் தொடங்குவான்.
இதை நம்பி பாமரர்கள்  சீட்டை வாங்கி குவித்தனர். இதைக் கேள்விப்பட்ட சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் பெரிதும் மனம் வருந்தினார்.

தேவன் அருளும் இலவச ஈவு தான் பாவமன்னிப்பு என்றும், அதை பணம் கொடுத்துப் பெற முடியாது என்றும், கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவன் மன்னிப்பைப் பெற முடியும் என்றும் வேதாகம ஆதாரங்களோடு ஆலயங்களில் பேசத் தொடங்கினார்.

என்றாலும், பாமர மக்கள் தொடர்ந்து பாவமன்னிப்புச் சீட்டுக்களை வாங்குவதை கண்டு செய்வதறியாது திகைத்தார். வழிகாட்டுமாறு இயேசுகிறிஸ்துவை நோக்கி ஜெபித்தார்.

தனது கருத்துக்களை எடுத்துச் சொல்லி வழி தேடலாம் என்ற எண்ணத்துடன் பிரடெரிக் என்ற இளவரசனிடம் சென்றார். அங்கே அவருக்கு மற்றும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பாவமன்னிப்பு சீட்டு என்று லூதர் பேசத் தொடங்கியவுடன் பிரடெரிக் கோபத்துடன் எழுந்து நின்றார்.
அதைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள். எனக்கும் அதை விற்பது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றார் பிரடெரிக்.

அதை தான் நானும் கூற வந்தேன், பாவமன்னிப்பு சீட்டை விற்க அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார் லூதர்.

அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்! நான் ஏற்கனவே இங்கு விற்கக்கூடாது என்று  பிரதம பேராயரிடம் கூறிவிட்டேன். அதை மீறி வந்தால் விரட்டி விடுவேன் என்றார் பிரடெரிக்.
"நல்லது பிரபுவே நன்றி" என்றார் லூதர்.

ஆனால் பிரடெரிக் அடுத்து கூறிய செய்தி மார்ட்டின் லூதருக்கு அதிர்ச்சியை அளித்தது.
நான் இந்த விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தை ஒழுங்காக நடத்த வேண்டாமா? பேராசிரியர்களுக்கு எவ்வாறு சம்பளம் கொடுப்பது? நான் ஐயாயிரத்துக்கும் மேலாகச் சேர்த்து வைத்திருக்கிறேனே புனிதச் சின்னங்கள் அவற்றைக் கொண்டுதான் பணம் திரட்ட வேண்டும்.

ஜெர்மனி நாட்டிலேயே என்னிடம் தான் இவ்வளவு அதிகமான புனிதச் சின்னங்கள் உள்ளன. வரப்போகும் சகல பரிசுத்தவான்களின் நாளன்று அவற்றை விட்டன்பர்க் ஆலயத்தில் காட்சிக்கு வைக்கப் போகிறேன்.
அதை காண திரளான மக்கள் வருவார்கள் பணமும் கொடுப்பார்கள் என்றார் பிரடெரிக்..
எதற்காக? என்று கேட்டார் மார்ட்டின் லூதர்.

பிரடெரிக்குக்குக் கோபம் வந்துவிட்டது.
எதற்காக என்றா கேட்கிறீர்கள்? புனித சின்னங்களைப் பார்ப்பதற்காகதான் பணம் கொடுப்பார்கள்.
அவற்றைத் தொட்டாலே அவர்கள் பாவம் எல்லாம் பறந்தோடிப் போய்விடுமே! பாவமன்னிப்புச் சீட்டு இதற்கு தடையாக இருக்க நான் விடுவேனா?

ரோமாபுரியில் மண்டபம் கட்டினாலென்ன? கட்டாவிட்டாலென்ன? நான் இந்த பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு பணம் திரட்டியாக வேண்டும் என்று கெர்ச்சித்தார் பிரடெரிக் இளவரசன்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மார்ட்டின் லூதர் ஒன்றுமே பேசாமல் தலையை குனிந்தவாறு வெளியேறிவிட்டார்.

பாவமன்னிப்புச் சீட்டும் பாவமன்னிப்பை அளிக்காது. அதேபோன்று புனித சின்னங்களும் பாவமன்னிப்பு அளிக்க முடியாது! கிறிஸ்து ஒருவரே பாவமன்னிப்பு அளிக்கக் கூடியவர் என்பதை எல்லாருக்கும் சுட்டிக் காட்டுவது தனது கடமை என்பதை உணர்ந்தார் மார்ட்டின் லூதர்.

தன்னுடைய அறைக்குச் சென்று லூதர் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்.
ரோமானிய திருச்சபையின் தவறான கொள்கைகளை ஒவ்வொன்றாகப் பட்டியல் போட்டு எழுதினார்.
அவை தவறானவை என்பதை வேதாகம ஆதாரங்களுடன் விளக்கினார். இலத்தின் மொழியில் எழுதப்பட்ட இந்தப் பட்டியலில் 95 நியாயங்கள் இருந்தன.

சகல பரிசுத்தவான்களின் தினம் கொண்டாட்டத்திற்காக நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் விட்டன்பர்க் வந்து கூடியிருந்தனர்.

அவர்களுக்கு இந்த நியாயங்களைத் தெரிவிக்க முடிவு செய்தார் மார்ட்டின் லூதர். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறை மிகவும் வினோதமானது என்றாலும் அவர் எதிர்பார்த்த பலனை தந்தது.
1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள். சகல பரிசுத்தவான்கள் தினத்திற்கு முந்தைய நாள் லூதர் தனது நியாயங்களை விட்டன்பர்க் தேவாலய கதவுகளில் ஆணிகளால் அறைந்து மக்கள் பார்க்கும்படி வைத்துவிட்டார்.

இந்தநியாயங்களை குறித்து விவாதிக்கவும் நான் தயாராக இருப்பதாகவும் மார்ட்டின் லூதர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நாளில் சீர்திருத்த திருச்சபையின் துவக்க நாளாகக் கருதப்படுகிறது.
நியாயங்கள் அறைந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயக் கதவை சுற்றிக் கூடிவிட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக ஜெர்மனி நாடெங்கும் இந்த செய்தி பரவியது. மக்கள் இவற்றைப் படித்து சிந்திக்கத் துவங்கினார். இதனால் பாவமன்னிப்புச் சீட்டுக்கள் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது.
இதன்மூலம் ரோமானிய திருச்சபை வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியது.

துறவி வாழ்க்கை வேதத்திற்கு புறம்பானது என்பதை உணர்ந்த மார்ட்டின் லூதர் இதைத்தொடர்ந்து 1525 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் கன்னியாஸ்திரியாக இருந்து சீர்திருத்தத்த கொள்கைகளைக் ஏற்றுக்கொண்ட காதரின் வான்போரா என்ற அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

சீர்திருத்தக் கொள்கைகள் பரவப்பரவ பல மடங்களிலிருந்த துறவிகளும், கன்னியாஸ்திரிகளும் மடங்களை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இவர்களில் பலர் மணம்புரிந்து இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டார்கள்.

இப்படியாக இன்றும் மார்ட்டின் லூதர் ஏற்படுத்திய சீர்திருத்த கிறிஸ்தவம் உலகம் முழுவதும் வேரூன்றி இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறது. என்பதே உண்மை.
சத்தியத்தை எங்கும் சமரசம் செய்து கொள்ளாமல் சத்தியத்தை சத்தியமாக மக்களுக்கு போதித்து சாட்சியாக வாழ்ந்த மார்ட்டின் லூதரை எழுப்பித்தந்த தேவனை துதிப்போம். ஆமென்!! அல்லேலூயா!!!
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். (#II_தீமோத்தேயு 4:4)
நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (#தீத்து 2:1)