கூந்தல் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் சொல்லும் எண்ணெய்

Prabha Praneetha
2 years ago
கூந்தல் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் சொல்லும் எண்ணெய்

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வை ஆயுர்வேதத்தால் வழங்க முடியும்.

இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வீட்டில் தயாரிக்க கூடிய இந்த எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சியில் அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்களும் உணர்வீர்கள். அப்படி ஒரு எண்ணெயை இப்போது வீட்டில் தயாரிக்கலாம்.

முடி பிரச்சனை என்பது மாசுபாடு, சரியான பராமரிப்பின்மை, வாழ்க்கை முறை, உணவு முறை என பல காரணங்களை சார்ந்துள்ளது.

நீங்கள் பயன்படுத்தும் முடி தயாரிப்புகள் ரசாயனங்களை கொண்டிருந்தால் இதுவும் முடி சேதத்துக்கு வழிவகுக்கும். இதை சமாளிக்க சிறந்த வழி வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் வைப்பதுதான்.

ஆயுர்வேதத்தின் படி கூந்தலுக்கு எண்ணெய் ஆனது பல்வேறு ஆற்றல் நிவாரணங்களை வழங்க கூடியது. தலைமுடி உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளது.

மேலும் தலைப்பகுதியில் குவிந்திருக்கும் அதிகப்படியான தோஷத்தை நீக்கி, மன அழுத்தத்திலிருந்து விடுபட செய்கிறது. இதன் மூலம் உச்சந்தலை சமநிலையை மீட்டெடுக்கிறது.
 

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கூந்தல் வளர்ச்சி எண்ணெய் தயாரிப்பு முறை குறித்து பார்க்கலாம். எளிமையாக வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே இந்த அற்புதமான எண்ணெயை தயாரிக்கலாம்.

தேவை

கறிவேப்பிலை - 1 கைப்பிடி (காம்பு நீக்கி இலைகள் மட்டும்)
செம்பருத்தி பூக்களின் இதழ்கள் - 1 கைப்பிடி
தேங்காயெண்ணெய் - 100 மில்லி அளவு
எசன்ஷியல் எண்ணெய் - சில துளிகள்
வெந்தயம் - 2 டீஸ்பூன் அளவு
கண்ணாடி பாட்டில் - 1

அகலமான பாத்திரத்தில் அனைத்தையும் கலந்து எசன்ஷியல் எண்ணெய் தவிர்த்து, அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

இவை கொதித்ததும் இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைத்து கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும். இப்போது இந்த எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்க்க வேண்டியதில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தலைக்குளியலுக்கு முன் தினம் இந்த எண்ணெயை உச்சந்தலை முதல் முடி நுனி வரை நன்றாக தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.

பிறகு மறுநாள் காலை ஷாம்பு கொண்டு தலைக்குளிக்கவும். அல்லது எண்ணெய் பயன்படுத்திய 3 மணி நேரம் பிறகும் குளிக்கலாம்.