ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 40 பேர், பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவிப்பு!

ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.
உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷியா தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதலில் ரஷியாவின் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என உக்ரைனின் பாதுகாப்பு துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் மீண்டும் போர் வந்ததற்கு ரஷ்ய அதிபர் புதின் தான் பொறுப்பு என ஐரோப்பிய ஆணையத் தலைவர் கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மக்களுடன் துணை நிற்கிறது எனவும் சுதந்திர நாட்டிற்கு எதிராக ரஷ்ய தலைமையின் முன்னோடியில்லாத ஆக்கிரமிப்புச் செயலை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷியா ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள், சுமார் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார்.



