அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 38 பேருக்கு தூக்குத் தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 49 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
38 பேருக்கு தூக்குத் தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆா்.படேல் நேற்று தீர்ப்பளித்தார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. நகரின் 21 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின.
மொத்தம் 70 நிமிடங்களுக்குள் இந்தத் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து முடிந்தது. இதில் 56 அப்பாவி மக்கள் பலியாகினர். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பெரும் பொருள்சேதமும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டு மக்கள் மீள்வதற்குள் குஜராத்தின் மற்றொரு முக்கிய நகரமான சூரத்திலும் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நாச செயல்களுக்காக வைத்திருந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை அனைத்தையும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் ஒன்று சேர்த்து, ஒரே வழக்காக விசாரித்து வந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய விசாரணை பல ஆண்டுகளாக நீடித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை நிறைவடைந்ததாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.படேல் அறிவித்தார்.
அதையடுத்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
மொத்தம் 78 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஒருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாறியதை அடுத்து மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன.
அதன் முடிவில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மற்ற 28 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 38 பேருக்கு தூக்குத் தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி ஏ.ஆர்.படேல் நேற்று தீர்ப்பு அளித்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அதற்குப் பழி தீர்க்கும் விதமாக இந்தியன் முஜாஹிதீன், சிமி ஆகிய இரு இயக்கத்தினர் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கைதானவர்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.



