கழிவுகளை குறைக்க, சுற்றுச்சூழலுக்கு சாதகமான துணி முக கவசத்தை பயன்படுத்த அறிவுரை

கழிவுகளை குறைக்க, சுற்றுச்சூழலுக்கு சாதகமான, துணியால் தயாரிக்கப்படும் முக கவசங்களை பயன்படுத்துமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகம் முழுதும், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில், 2020ம் ஆண்டு மத்தியில், கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, 'என்95, கே.என்95' போன்ற முக கவசங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை முக கவசங்கள் கழிவுகளாக வெளியே வீசப்படுகின்றன.
அவை சுற்றுச்சூழலுக்கு பாதகமானதாக உள்ளன.இதன் காரணமாக, சுற்றுச் சூழலுக்கு சாதகமான, துணியால் தயாரிக்கப்படும் முக கவசங்களை உபயோகிக்குமாறு, மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில், ஒவ்வொருவரும் சராசரியாக 23 கிலோ துணிகளை ஒவ்வொரு ஆண்டும் கழிவுகளாக வீசுகின்றனர். அதைத்தவிர, மொத்தமாக, 7.8 லட்சம் டன் எடையிலான, தோல், ரப்பர் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பொருட்கள், கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.



