ஆப்கானிஸ்தானில் 35 லட்சம் பேர் பட்டினியில் வாடுகின்றனர் ஐ.நா. தகவல்

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு மாத மத்தியில் தலீபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டன. இதனால் ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் உள்நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ள சுமார் 35 லட்சம் ஆப்கான் மக்கள் பட்டியினால் வாடுவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் பாபர் பலோச், கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருகிறது, பட்டினி இப்போது நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 55 சதவீதம் வறுமையை எதிர்கொள்கின்றனர். மேலும் பாதுகாப்பின்மை காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் 35 லட்சம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்” என்றார்.



