5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்-கோஸ்டா ரிக்கா அரசு அறிவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தற்போது பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்த வகையில் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக கோஸ்டா ரிக்காவில் தான் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5.1 கோடி மக்கள் தொகையை கொண்ட கோஸ்டா ரிக்கா நாட்டில் இதுவரை கொரோனாவால் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 54 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.